டெல்டா திரிபுக்கெதிரான தடுப்பூசிப் பலம் பற்றிய இந்திய ஆராய்ச்சியை உறுதிப்படுத்தும் ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சி.
கடந்த வருடம் பிரிட்டன், ஸ்கொட்லாந்து போன்ற இடங்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் கொவிட் 19 க்கு எதிரான ஓரளவு பாதுகாப்புச் சக்தியை ஒரேயொரு தடுப்பூசியே தருவதாகக் காட்டியது. அது தற்போது டெல்டா திரிபு பரவிவரும் சமயத்தில் செல்லுபடியாகாத முடிவு என்று டெல்லி கங்காராம் மருத்துவமனையின் ஆராய்ச்சி காட்டியிருக்கிறது.
இந்திய ஆராய்ச்சியின் முடிவை ஏற்றுக்கொள்வது போன்றே பிரிட்டனில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடாத்தியிருக்கும் ஆராய்ச்சியும் விளைவுகளைக் காட்டியிருக்கிறது. ஏற்கனவே பரவியிருந்த கொவிட் 19 நோய்க் கிருமிகளுக்கு ஒரு தடுப்பூசி கொடுத்த எதிர்ப்புச் சக்தியை விடக் குறைவானதையே டெல்டா திரிபுக்கெதிராக ஒரு தடுப்பூசியால் கொடுக்க முடிகிறது என்கிறார்கள் அப்பல்கலைக்கழக ஆராய்வாளர்கள்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கு இரண்டரை மில்லியன் பி.சி.ஆர் பரிசோதனைகளின் விளைவுகள் பதியப்பப்பட்டுக் கணிப்பிடப்பட்டன. “முடிந்தவரை வேகமாக நாட்டு மக்கள் அனைவருக்கும் இரண்டு தடுப்பூசிகளையும் கொடுத்துவிடுவதே இத்தொற்றை வெல்ல ஒவ்வொரு நாடுகளும் செய்ய வேண்டியது,” என்கிறார் அவ்வாராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர் சாரா வோக்கர்.
அஸ்ரா செனகா, பைசர் பயோன்டெக் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளின் இரண்டு தடுப்பூசிகளும் சேர்ந்தாலும் டெல்டா திரிபுக்கெதிராக முன்பு பரவியிருந்தவைகளைச் சிறிது குறைவான பாதுகாப்பையே டெல்டா திரிபுக்கெதிராகக் கொடுக்கின்றன. இரண்டு தடுப்பூசிகளுக்கும் இடையிலான கால இடைவெளி எவ்வித வித்தியாசத்தையும் உண்டாக்கவில்லை.
இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்படுகிறது. பெருமளவில் நோயால் தாக்கப்படாவிட்டாலும், அச்சமயத்தில் அவர்கள் அதிக கிருமிகளையும் தம்மிடம் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் மற்றவர்களுக்குத் தொற்றைக் கொடுக்கக்கூடும்.
சுமார் நான்கு மாதங்களுக்குப் பின்னர் இரண்டு தடுப்பு மருந்துகளுமே ஒருவருக்கு ஒரேயளவு பாதுகாப்பையே கொடுக்கின்றன என்கிறது ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சியின் முடிவுகள்.
சாள்ஸ் ஜெ.போமன்