கரியமிலவாயு வெளியேற்றலைப் பெருமளவில் குறைக்க 2030 க்கான சிறீலங்காவின் பேராவலான குறிக்கோள்!
நிலக்கரியால் இயக்கப்படும் மின்சாரத் தயாரிப்பு மையங்கள் கட்டுவதை முழுவதுமாக நிறுத்திவிட முடிவெடுத்திருக்கிறது சிறீலங்கா அரசு. உலகக் காலநிலை மாற்றங்களுக்கு முக்கிய பங்களிக்கும் நச்சு வாயுகளை வெளியேற்றி சூழல் மாசுபடவும், வெப்பம் அதிகரிக்கவும் செய்கிரது நிலக்கரி. அதற்குப் பதிலாக மீள்பாவனைக்குட்படுத்தக் கூடிய இயற்கை வளங்கள் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவை 2030 ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அந்தப் பேராவலான குறிக்கோளில் முக்கிய அங்கம் வகிக்கவிருக்கிறது கூரைகளில் பதிக்கப்படும் சூரிய வெப்பத்தை மின்சாரமாக்கும் கலங்கள். ஏற்கனவே நாட்டின் 35 விகிதமான மின்சாரம் நீரினால் பெறப்படும் சக்தியால் உண்டாக்கப்படுகிறது. சிறீ லங்கா 2050 இல், தனக்குத் தேவையான சக்தியை கரியமிலவாயுவை வெளியிடாத இயற்கை வளங்களால் மட்டுமே பெறும் என்ற வாக்குறுதியுடன் ஐ.நா-வின் காலநிலை அமைப்புக்குச் சமர்ப்பித்திருக்கிறது.
சிறீலங்காவின் ஒரேயொரு நிலக்கரி மின்சாரத் தயாரிப்பு மையம் 2006 இல் சீனாவின் உதவியுடன் ஸ்தாபிக்கப்பட்டது. அது நாட்டின் மூன்றிலொரு பங்கு மின்சாரத்தைத் தயாரிக்கிறது. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இந்தியா மேலுமொரு நிலக்கரி மையத்தைக் கட்டித்தர முன்வந்தது. ஆனால், அத்திட்டம் சூழல் பேணும் இயக்கங்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது.
சிறீலங்காவின் இந்தக் குறிக்கோளை நிறைவேற்றச் சர்வதேச உதவிகள் கொடுக்கப்படுகின்றன. ஆசிய வளர்ச்சி வங்கி 50 மில்லியன் டொலர் கடனாகக் கொடுக்கிறது. சூரியக் கலங்களைக் கூரைகளில் பதிப்பவர்களுக்கு உதவ 4 விகித வட்டியில் கடன் கொடுக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்