அனுமதியின்றி ஐக்கிய ராச்சியத்துக்குள் நுழையும் ஆப்கானிய அகதிகளும் கடுமையான கையாளல் காத்திருக்கிறது.
தலிபான் இயக்கத்தினர் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதையடுத்துப் சில ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா, கனடா ஆகியவையும் குறிப்பிட்ட ஒரு தொகை ஆப்கானிய அகதிகளைத் தத்தம் நாடுகளில் அனுமதிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தன. பிரிட்டன் தன் பங்குக்கு 20,000 ஆப்கானியர்கள் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தது.
ஆப்கானிலிருந்து பிரிட்டிஷ் இராணுவத்தினரை வெளியேற்றியதற்காக போரிஸ் ஜோன்சன் மீது ஏற்பட்டிருக்கும் விமர்சனத்துடன் 20,000 என்று குறிப்பிடப்படுகிறவர்கள் யார், எப்போது அவர்கள் பிரிட்டனுக்குக் கொண்டுவரப்படுவார்கள், எப்படித் தெரிந்தெடுக்கப்படுவார்கள் போன்ற கேள்விகள் பிரிட்டிஷ் அரசை நோக்கி எழுப்பப்பட்டிருக்கின்றன.
அதேசமயம், சமீபகாலத்தில் பிரிட்டனின் எல்லைக்குள் அனுமதியின்றி நுழையும் அகதிகளைக் கடுமையான நடவடிக்கைகளால் கையாளவிருப்பதாகப் பிரிட்டன் அறிவித்திருந்தது. அப்படியானால், ஆப்கானிஸ்தானிலிருந்து அனுமதியின்றி உள்ளே நுழைபவர்களை பிரிட்டன் பிரத்தியேகமாகக் கையாளுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
ஆப்கானிஸ்தானிலிருந்து ஐக்கிய ராச்சியம் ஏற்றுக்கொள்ளப்போவதாக இருக்கும் 20,000 பேர் பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் மற்றும் அங்கே பிரிட்டிஷ் அதிகாரங்களுடன் ஒத்துழைத்தவர்கள் ஆகியோர், அவர்களின் குடும்ப அங்கத்தினர் ஆகியோரென்று குடியேற்ற அமைச்சர் பிரீதி பட்டேல் தெரிவிக்கிறார். அவர்களைப் பற்றிய விசாரணைகள் நடாத்தப்பட்டு வரவிருக்கும் ஐந்து வருடங்களில் பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
மற்றப்படி பிரிட்டனுக்குள் ஆங்கிலக் கால்வாய் வழியாகவோ, வேறெந்த வழியாகவோ அனுமதியின்றி நுழைபவர்கள் எப்படி நடத்தப்படுவார்களோ அதே போலவே ஆப்கானிலிருந்து வருபவர்களும் நடத்தப்படுவார்கள் என்றும் பிரீதி பட்டேல் குறிப்பிட்டிருக்கிறார்.
பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் பிரேரணையின்படி பிரிட்டனுக்குள் அனுமதியின்றிப் புகுந்து தஞ்சம் கேட்பவர்களுக்கு 4 வருட சிறைத்தண்டனை, மனிதர்களை நாட்டுக்குள் கடத்தி வருபவர்களுக்கு ஆயுள் தண்டனை, அவ்வகதிகள் காத்திருக்கும் காலத்தில் மூன்றாவது நாட்டில் முகாம் வாழ்வு போன்றவை காத்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்