இந்தியத் தூதுவராலயக் காரியாலயங்களுக்குள் நுழைந்து களவாடிய தலிபான்கள்.
ஹெராத், கந்தகார் ஆகிய இரண்டு நகரங்களிலுமிருந்த இந்திய – ஆப்கானியத் தொடர்புகளுக்கான காரியாலயங்களை இந்தியா சில வாரங்களுக்கு முன்னரே பூட்டிவிட்டு அங்கிருந்த தனது ஊழியர்களை வெளியேற்றிவிட்டது. பூட்டப்பட்ட அந்தக் காரியாலயங்களுக்குள் உடைத்துக்கொண்டு நுழைந்த தலிபான்கள் கோப்புக்களைத் திருடிச் சென்றிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.
அதையடுத்துத் தலைநகரான காபுலில் இருந்த தூதுவராலயத்திலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஆகஸ்ட் 15 ம் திகதியன்று காபுலுக்குள் நுழைந்து நாட்டைத் தலிபான்கள் கைப்பற்றியதும் அதுவும் பூட்டப்பட்டு அங்கிருந்த ஊழியர்களையும் இந்தியா நாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டது. பாகிஸ்தானிய ஊடகச் செய்திகளின்படி இந்தியப் பாகத்திலிருந்து தலிபான் இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தியே காபுல் தூதுவராலய ஊழியர்களுக்கு தலிபான்கள் பாதுகாப்புக் கொடுத்து விமான நிலையத்துக்குக் கூட்டிச் சென்றார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
அந்த வளாகத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த ராஜதந்திரிகளுக்கான வாகனங்களை அவர்கள் திருடிச் சென்றிருக்கிறார்கள். ஆப்கானிய அரசின் உளவு நிறுவனமான NDS உடன் சேர்ந்து வேலை செய்த ஆப்கானியர்கள் பற்றிய விபரங்களை அவர்கள் தேடியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
ஜலாலாபாத், காபுல் நகர இந்தியத் தூதுவராலயங்களில் என்ன நடக்கிறது என்பது பற்றிய விபரங்களெதுவும் இந்திய அரசுக்குத் தெரியாது. தலிபான்களின் வர்த்தகங்கள், பொருளாதாரங்களைக் கையாளும் ஹக்கானி சகோதரர்கள் தமது இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 6,000 பேருடன் காபுலைத் தமது கையில் வைத்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
அந்தச் சகோதரர்களில் ஒருவரான அனாஸ் ஹக்கானி முன்னாள் ஜனாதிபதியான ஹமீத் கர்சாய் [2004 – 2014] கடந்த ஆட்சியில் ஜனாதிபதிக்கு ஈடான முக்கிய பதவியிலிருந்த அப்துல்லா அப்துல்லா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அவர்களிருவரின் நடமாட்டங்களையும் கட்டுப்படுத்தியிருக்கும் தலிபான்கள் அவர்களைப் பிரதான விருந்தினர்களாக அழைத்து ஜனாதிபதி மாளிகையில் வைத்து அவர்கள் மூலமாக முல்லா அப்துல் கானி பரதாரை நாட்டின் தலைவராகப் பிரகடனம் செய்யும்படி கேட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்