தலிபான்களால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்தியர்கள் காபுல் விமான நிலையத்தில், மேலும் 200 பேர் குருத்துவாராவில் அடைக்கலம்.
தலிபான்களால் கைப்பற்றப்பட்டுவிட்ட ஆப்கானிஸ்தானின் வெவ்வேறு நகரங்களில் சுமார் 1,000 இந்தியர்கள் தொடர்ந்தும் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சுமார் 150 பேர் தலிபான்களுடைன் தொடர்புள்ளவர்களால் கைப்பற்றப்பட்டுக் கடத்தப்பட்டார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்டுக் காபுல் விமான நிலையத்துக்குள் நுழைந்துவிட்டதாகவும், விமானத்துக்காகக் காத்திருப்பதாகவும் பின்னர் தெரியவந்திருக்கிறது.
தலிபான்களின் ஊடகத் தொடர்பாளரான அஹ்மதுல்லா வாசெக் அது தவறென்று குறிப்பிட்டார். ஆனாலும், அவர்கள் கடத்தப்பட்டு காபுல் பொலீஸ் நிலையமொன்றில் துன்புறுத்தப்பட்டு, விசாரிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அவர்களை ஏதோ வழியாகத் தலிபான்களுடன் தொடர்பு கொண்டு இந்திய அரசின் ராஜதந்திரிகள் விடுவித்து காபுல் விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
மேலும் 200 இந்தியர்கள் காபுலில் இருக்கும் குருத்துவாராவுக்குள் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. சனியன்று இந்திய இராணுவ விமானமொன்று 85 இந்தியர்களைக் காபுலிலிருந்து தாஜிக்கிஸ்தானுக்குக் கொண்டு சென்றிருக்கிறது. மேலுமொரு விமானம் காபுலுக்குப் போகத் தயார் நிலையிலிருக்கிறது.
காபுல் விமான நிலையத்தில் பெரும் ஒழுங்கின்மை நிலவி வருகிறது. அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் அவ்விமான நிலையத்தின் வெளியே பல்லாயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். காபுலிலிருக்கும் தத்தம் நாட்டவர்களை அங்கே வரும்படி பல நாட்டினரின் வெளிவிவகார அமைச்சும் வரச்சொல்லியிருக்கிறது. அங்கே அவர்கள் காத்திருக்கவேண்டிய நேரம் பல மணிக்கணக்காகலாம், விமான நிலையத்தினுள்ளும் நீண்ட காத்திருப்பு உண்டாகலாம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. தவிர, பல்லாயிரக்கணக்கான ஆப்கானர்களும் அங்கிருந்து வெளியேற விரும்பிக் காத்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்