பாலஸ்தீனர்களின் அரசு தனது குடிமக்களைக் கண்டபடி கைது செய்து வருவது பற்றி ஐரோப்பாவும், ஐ.நா-வும் கவலை தெரிவிக்கின்றன.
பாலஸ்தீனப் பிராந்தியத்தில் தேர்தல்கள் நடாத்தாமல் ஆட்சிசெய்து வரும் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் அரசின் விமர்சகர்களை வேறு காரணங்களின்றிக் கைது செய்து உள்ளே வைப்பது சமீப காலங்களில் அதிகமாகி வருகிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்னர் அதேபோன்று கைது செய்யப்பட்டு விசாரணைக்குக் கொண்டு போகப்பட்ட அப்பாஸின் விமர்சகர் நிஸார் பானத் கொல்லப்பட்டதை எதிர்த்துப் பலர் குரலெழுப்பி வருகிறார்கள்.
விசாரணையில் பானத் கொல்லப்பட்டதைப் பற்றிய விசாரணைகளை நடாத்துவதாக உறுதியளித்த பாலஸ்தீன அரசு பொறுப்பான பதில்களெதையும் இதுவரை கொடுக்கவில்லை. அக்கொலையையடுத்து எழுந்த பேரணிகளின் எண்ணிக்கை குறைந்தாலும் அடிக்கடி அது பற்றிய விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
21 ம் திகதி சனிக்கிழமையன்றும் நிஸார் பானத் கொலை, மற்றும் பாலஸ்தீன அதிகாரத்தின் மனித உரிமைகள் ஒடுக்கல் நடவடிக்கைகள் பற்றிக் கண்டித்து ஊர்வலம் திட்டமிடப்பட்டிருந்தது. அதையொட்டி 23 பாலஸ்தீனர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 21 பேர் எவ்வித ஊர்வலங்களும் நடக்க முன்னரே “எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்குபற்றக் கூடும்,” என்ற ஊகத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அதைக் குறிப்பிட்டு ஐ.நா-வின் மனித உரிமைகள் அமைப்புக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
ஜெருசலேமிலிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காரியாலயம், “வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாகத் தமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துகிறவர்களை ஒடுக்கியடக்கப் பாலஸ்தீன அரசு எடுத்துவரும் செயல்கள் கடும் கண்டனத்துக்குரியவை,” என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. அவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி ஐ.நா-வுடன் சேர்ந்து கேட்டுக்கொள்கிறது.
பாலஸ்தீன அரசு இதுவரை இதுபற்றி எந்த மறுமொழியும் தெரிவிக்கவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்