காபுலிலிருந்து தனியார் விமானம் மூலம் 200 நாய்களையும், பூனைகளையும் பிரிட்டனுக்குக் கொண்டுவந்த முன்னார் பிரிட்டிஷ் இராணுவ வீரர்.
உலக நாடுகள் பலவும் தத்தம் குடிமக்களையும், தமது ஊழியர்களாக இருந்த ஆப்கானர்களையும் காபுலிலிருந்து பாதுகாப்பாகத் தத்தம் நாட்டுக்குக் கொண்டுபோகும் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருந்த அதே சமயத்தில் தனது மிருகங்கள் காக்கும் அமைப்பினால் வளர்க்கப்பட்ட நாய்களையும் பூனைகளையும் நாட்டுக்குக் கொண்டுவரவேண்டுமென்று துடித்து அதற்காக அதிகாரத்துடன் பல முனைகளிலும் போராடிவந்தார் முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ வீரரொருவர்.
Paul “Pen” Farthing என்ற அந்த பிரிட்டிஷ்காரர் ஒரு வழியாகத் தனியாக விமானமொன்றை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் அந்த மிருகங்களை பிரிட்டனுக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். தனது போராட்டத்துக்காக அவர் பல அதிகாரிகளுடனும் தரமற்ற முறையில் மோதியிருந்தார். அவரது மிருகங்களை விமான நிலையத்துக்குக் கொண்டுவருவதற்காக காபுலிலிருந்த இராணுவத்தினர் தமது உயிரைப் பணயம் வைத்துப் பெரும் முயற்சி செய்யவேண்டியதாயிருந்தது. தனது மிருகங்களை மீட்டு வந்த அவர் அவைகளுக்காக ஊழியம் செய்துவந்த ஆப்கானர்களை அங்கேயே விட்டுவிட்டார்.
நௌசாத் அமைப்பை ஆப்கானிஸ்தானில் நடத்திவந்த பார்திங் என்ற அந்த முன்னாள் இராணுவ வீரர் பாதுகாப்பாக நாட்டுக்குக் கொண்டுவரவேண்டியவர் என்ற உரிமையுள்ளவர். ஆனால், தனது மிருகங்களைக் கொண்டுவராமல் தான் மீட்பு விமானத்தில் ஏறமுடியாதென்று மறுத்துவிட்டார்.
தனது மிருகங்களை மீட்டு வருவதற்காகச் சமூக வலைத்தளங்களில் எழுதியும், அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் கடிதமெழுதியும் போராடிய அவருக்கு பிரிட்டனில் ஒரு சாரார் ஆதரவு கொடுத்தார்கள். சில பிரபலங்களும் அதில் அடக்கம். இன்னொரு சாரார் மனிதர்களையே காப்பாற்ற இயலாத நிலையில் மிருகங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதா என்று எதிரணியிலும் இருந்தார்கள்.
பார்திங் தனது ஊழியர்களையும் கொண்டுவருவதற்காக அவர்களுக்கும் பிரிட்டிஷ் அரசு விசாக்களைக் கொடுத்திருந்தது. ஆனால், விமான நிலையத்துக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. எனவே மிருகங்கள் மட்டுமே பார்திங்குடன் எடுத்துவரப்பட்டன. காபுலில் 150 பிரிட்டர்களும், அவர்களுக்காக வேலை செய்த 1,100 ஆப்கானிகளும் மீட்டுவர முடியாமலே பிரிட்டன் தனது மீட்பு பணிகளை நிறுத்தவேண்டியதாயிற்று.
பல பிரச்சினைகளையும் தாண்டி ஒரு வழியாக ஞாயிறன்று அந்தத் தனியார் விமானம் பிரிட்டனுக்கு வந்து சேர்ந்தது. அதையடுத்து அந்த மீட்புத் திட்டம், அது நடாத்தப்பட்ட விதம், பாதுகாப்புகள், வாய்ச்சண்டைகள் பற்றிய பல சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்