தமது காபுல் மருத்துவ முகாமிலிருந்த ஆப்கானியக் குழந்தைகளை அங்கிருந்து கொண்டுவந்தது நோர்வே.

“காபுலில் எங்கள் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றுவந்த ஆப்கானியக் குழந்தைகள் சிலரை நாம் எங்களுடைய மீட்பு விமானம் மூலம் நோர்வேக்குக் கொண்டுவந்திருக்கிறோம். அங்கே நிலவிய படு மோசமான நிலபரத்தில் அவசரமாக அந்த முடிவு எங்கள் வெளிவிவகார அமைச்சால் எடுக்கப்பட்டது,” என்று நோர்வேயின் மூன்றாவது மீட்பு விமானமும் நாட்டுக்கு வந்தபின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் அறிவித்தார் வெளிவிவகார அமைச்சர் ஈனெ எரிக்சன் சொரெய்டெ.   

காபுலில் இருந்த நோர்வேக் குடிமக்கள், நோர்வேயின் தூதுவராலயத்தில் ஊழியராக இருந்த ஆப்கானியர் ஒருவரும் அவரது குடும்பம், மற்றும் சில காலமாகவே காபுலில் நோர்வே சிகிச்சை முகாமிலிருந்த ஆப்கானியக் குழந்தைகளையும் நோர்வே அங்கிருந்து வெளியேற்றியிருக்கிறது. அக்குழந்தைகள் உடனடியாக நோர்வேயின் பாலர்களைப் பொறுப்பெடுக்கும் சமூக சேவைத் துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அக்குழந்தைகளின் தேவைகள் கவனிக்கப்பட்டு அவர்கள் நல்ல முறையில் கவனிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

காபுலிலிருந்து நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்கள் அங்கே எதிர்நோக்கிய மோசமான சூழ்நிலை என்ன போன்ற விடயங்களுக்குப் பதில் சொல்ல மறுத்துவிட்டார் வெளிவிவகார அமைச்சர். காபுலில் தொடர்ந்தும் பெருங் குழப்பமான, ஆபத்தான நிலைமையே நிலவுகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர் நோர்வே குடிமக்கள் அங்கே போவதுபற்றித் தத்தம் அறிவுக்கேற்ற முடிவுகளை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *