பிரேசிலில் சௌ பௌலோ பிராந்தியத்தில் நூற்றாண்டின் மோசமான வரட்சி நிலவிவருகிறது.
பிரேசிலின் வெவ்வேறு பகுதிகள் நீண்டகால வரட்சியால் தாக்கப்பட்டு வருவது சகஜமாகி வருவதாக நாட்டின் அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள். முக்கியமாக சௌ பௌலோ மா நிலம் சமீப வருடங்களாகக் கடும் வரட்சியால் தாக்கப்பட்டு வருகிறது. சுமார் நூறு வருட காலத்தில் அப்பகுதி இதுபோன்ற வரட்சியை நேரிட்டதில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
முன்று ஐம்பது அல்லது நூறு வருடங்களுக்கொருமுறையே உண்டாகி வந்த வரட்சி இப்போது அடுத்தடுத்த வருடங்களாகவோ, இரண்டு வருடங்களுக்கொருமுறையாகவோ வந்துகொண்டிருப்பதாக அப்பகுதியின் கோப்பித் தோட்டத் தொழிலாளர் அமைப்புகள் குறிப்பிடுகின்றன. இவ்வருடத்தில் ஏற்பட்டிருக்கும் வரட்சிக்கு முன்னர் கடும் குளிரால் அப்பிராந்தியம் தாக்கப்பட்டது.
சௌ பௌலோ மாநிலத்தின் கோப்பித்தோட்டங்கள் தமது வருமானத்தின் 30 விகிதத்தை இழந்திருக்கின்றன. இதுவரை எப்போதுமில்லாத அளவுக்குக் கோப்பியின் விலை கொள்வனவு செய்பவர்களுக்கு அதிகரித்திருக்கிறது.
ஒரு காலத்தில் சௌ பௌலோ பிராந்தியம் மழைச்சாரல் அடிக்கடி விழும் மாநிலம் என்று குறிப்பிடப்பட்டு வந்தது. இப்போது அப்பகுதியில் கடுமையான ஈரப்பதமான காற்று உண்டாகிறது, ஆனால், மழை பெய்வது அரிதாகியிருக்கிறது. அதற்கான காரணம் ஒருவேளை அமெஸான் காடுகளின் அளவு குறைந்து வருவதாக இருக்கலாம் என்று அதிகாரிகள் எண்ணுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்