கல்வித்துறையில் பல மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுச் செயல்பட ஆரம்பித்திருக்கிறது சீனா.
பரீட்சைகளை அளவுகோலாக, அடிப்படையாக வைத்து இயங்கிவரும் கல்வித்துறையைக் கொண்ட நாடு சீனா. பரீட்சைகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருப்பதால் அது மாணவர்களுக்குப் பெரும் மன உழைச்சல் உண்டாவதால் அவைபற்றிய புதிய முடிவுகளை எடுத்து அறிவித்திருக்கிறது சீனா. “மாணவர்களுக்கு மேல் பரீட்சைகள் அளவுக்கதிகமான பாரமாகியிருக்கின்றன. அவைகள் இளவயதினரை மனோ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கின்றன,” என்கிறது சீனாவின் கல்வித் திணைக்கள அறிக்கை.
ஆறு, ஏழு வயதினரைப் பரீட்சைகளுக்கு உட்படுத்துவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று உத்தரவு போடப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகான வகுப்புகளிலும் தவணைக்கு ஒரு பரீட்சை மட்டுமே நடத்தப்படலாம். முதலாம், இரண்டாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு வீட்டுப் பாடம் கொடுப்பதும் தடை செய்யப்பட்டது. நடுத்தர வகுப்பு மாணவர்களுக்கு 1.5 மணி நேரத்துக்கான வீட்டுப்பாடங்கள் மட்டுமே கொடுக்கலாம் என்று மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஜூலை மாதத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி கட்டணம் வாங்கிக்கொண்டு தனியார் முக்கிய பாடங்களில் வார இறுதி, விடுமுறை வகுப்புக்கள் கொடுப்பது நிறுத்தப்பட்டது. அத்துடன் 100 பில்லியன் டொலரை ஈட்டிவந்த நாட்டின் தனியார் பிரத்தியேக வகுப்புக்களெல்லாம் “இலாபம் சம்பாதிக்காத நிறுவனங்களாக” மாற்றப்பட்டன.
நாட்டின் கல்வித்துறையில் இருந்துவந்த ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்யவே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது. பெருமளவு கட்டணம் செலுத்தித் தமது பிள்ளைகளை அளவுக்கதிகமான நேரம் வகுப்புக்களுக்கு அனுப்புவது வசதி வந்த பெற்றோருக்கு வழக்கமாகி விட்டது. அதன் விளைவாக மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன், பொருளாதார வசதி குறைந்த குடும்பத்து மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்