இந்தியர்களின் “மத்திய கிழக்கு தொழில் வாய்ப்பு” என்ற கனவின் அந்திம காலம் நெருங்கிவருகிறது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்கள் கிடைத்து இந்தியாவிலிருந்து அங்கே சென்றவர்களின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம் பேராகும். அந்த எண்ணிக்கை அதையடுத்த ஆண்டுகளில் குறைய ஆரம்பித்துவிட்டது. கொவிட் 19 ஆரம்பிக்க முன்னர் 2019 இல் சுமார் 25 லட்சமாக அது குறைந்துவிட்டிருந்தது. 2020 இல் வெறும் ஏழு லட்சத்துக்குச் சரிந்த அந்தத் தொகை 2021 ஜூன் வரையில் 3 லட்சம் என்றாகியிருக்கிறது.

சமீபத்தில் இந்தியப் பாராளுமன்றத்தில் கேரள பாராளுமன்ற உறுப்பினர்  ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநிலங்களுக்கான வெளிவிவகார அமைச்சர் வி.முரளீதரன் கொடுத்த விபரமான பதில்களிலிருந்து இப்புள்ளிவிபரங்கள் தெரியவந்திருக்கிறது.

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களை நாடும் இந்தியர்களின் முக்கிய குறி மத்திய கிழக்கு எண்ணெய் வள நாடுகளாகும். சவூதி அரேபியா, பஹ்ரேய்ன், குவெய்த், எமிரேட்ஸ், ஓமான், கத்தார் ஆகிய ஏழு நாடுகளிலேயே பெரும்பாலான இந்தியர்கள் வேலைசெய்து வந்தார்கள். அந்த நாடுகளின் பொருளாதார நிலைமை தளம்ப ஆரம்பித்தது முதல் வெளிநாட்டவர்களுக்கான வேலைவாய்ப்புக்களும் குறைய ஆரம்பித்திருக்கின்றன. 

குறிப்பிட்ட ஏழு நாடுகளில் 2016 இல் வேலை வாய்ப்புப் பெற்றுப் பயணமான இந்தியர்களின் எண்ணிக்கை 31 லட்சமாகும். அவர்களில் பெரும்பான்மையானோர் – 13 லட்சம் பேர் எமிரேட்ஸுக்கும் இரண்டாவதாக 8 லட்சம் பேர் சவூதி அரேபியாவுக்கும் சென்றார்கள்.

கொவிட் 19 ஆரம்பித்தவுடன் இந்தியா வெளிநாட்டில் வேலைசெய்துகொண்டிருந்த இந்தியர்களைத் திருப்பி நாட்டுக்குக் கொண்டுவரும் வந்தே பாரதம் திட்டம் மூலம் சுமார் 61 லட்சம் பேர் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களில் மத்திய கிழக்கின் ஏழு நாடுகளிலிருந்தும் திரும்பியவர்களின் எண்ணிக்கை 40 லட்சமாகும். அதாவது இந்தியா திரும்பியவர்களில் சுமார் 66 விகிதமானோர் அங்கிருந்து திரும்பினார்கள். அதிலும் எமிரேட்ஸிலிருந்து திரும்பியவர்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 25 லட்சம் பேர்.

கொவிட் 19 பரவல் கட்டுக்குள் வந்தாலும் கூட அதே அளவில் அந்த நாடுகள் வெளிநாட்டவரை வேலைக்கு ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதே எதிர்காலக் கணிப்பீடாகும். எண்ணெய் விலைச் சரிவு உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் உண்டாகியிருக்கும் மற்றைய நெருக்கடிகளும் சேர்ந்து அந்த நாடுகளின் பொருளாதாரம் மீண்டும் முன்னைய நிலைக்குத் திரும்பப்போவதில்லை என்றே காட்டுகின்றன. அத்துடன், அந்த நாடுகளெல்லாம் சமீப வருடங்களில் தமது நாட்டவருக்கே முதல் கட்டமாக வேலைவாய்ப்புக்கள் கொடுக்கவேண்டுமென்ற சட்டங்களை அமுலுக்குக் கொண்டுவந்திருக்கின்றன. 

எனவே இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்புகள் கணிசமாகக் குறைந்துவருவது பல தாக்குதல்களை ஏற்படுத்துமென்று கணிக்கப்படுகிறது. வேலையின்மை, அன்னியச் செலாவணி குறைதல் ஆகியவை இந்தியாவைக் கடுமையாகத் தாக்கும். அவை நாட்டின் சமூகத்தில் பல புதிய பிரச்சினைகளை உண்டாக்கும் ஆபத்தும் உண்டாகும்.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *