நியூசிலாந்தில் ஒருவன் ஆறு பேரைக் கத்தியால் குத்திய சம்பவம் நடந்திருக்கிறது.
நியூசிலாந்தின் ஔக்லாந்தின் பல்பொருள் அங்காடியொன்றில் ஒருவன் கத்தியால் ஆறு பேரைத் தாக்கிய சம்பவம் நடந்திருக்கிறது. ஏற்கனவே பொலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவனே வெள்ளியன்று பிற்பகல் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரிகிறது.
அங்காடிக்கு வந்திருந்தவர்களில் கண்ணில் பட்டவர்களைத் தாக்கிய அவனை அங்கிருந்த பொலீசார் அவ்விடத்திலேயே சுட்டுக் கொன்றார்கள். தாக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகேயிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
“இது மத நம்பிக்கையால் அல்ல, வெறிபிடித்த ஒருவனால் செய்யப்பட்ட காரியம்,” என்று நடந்ததைக் கண்டித்த பிரதமர் ஜசிந்தா ஆர்டின் இஸ்லாமியக் காலிபாத் இயக்க ஆதரவாளன் ஒருவனே அதைச் செய்ததாகத் தெரிவித்தார்.
குறிப்பிட்ட தீவிரவாதி 2011 இல் சிறீலங்காவிலிருந்து நியூசிலாந்தில் குடியேறியவனாகும். அவன் 2016 இலிருந்தே பொலீசாரின் கவனத்துக்கு உள்ளாகியிருக்கிறான். அவனது நடவடிக்கைகள் அதனால் கண்காணிக்கப்பட்டு வந்திருக்கின்றன. அங்காடிக்குள் அவன் நுழையும்போதே கண்காணித்தவர்களும் அவனருகே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்