பனிரெண்டு பெண்கள் + நாலு ஆண்கள் = அல்பானிய அமைச்சரவை.
அல்பானியாவில் மூன்றாவது தடவையாக ஆட்சியமைத்திருக்கும் பிரதமர் எடி ராமா தனது அமைச்சரவையில் எவரெவர் பங்குகொள்வார்கள் என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறார். பனிரெண்டு பெண்களுக்கு அமைச்சரவையில் இடமளித்திருக்கும் அவர் நான்கு ஆண்களை மட்டுமே அமைச்சராக்கியிருக்கிறார்.
உப பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், உள்ளூராட்சி அமைச்சர், நீதியமைச்சர்களாக மட்டுமே ஆண்கள் இடம்பெறுகிறார்கள். நாலு கட்சிகள் பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்றன. எடி ராமாவின் சோசலிசக் கட்சி தலைமை தாங்குகிறது.
“கட்சிப் பங்காளிகள், குடும்ப உறுப்பினர்கள், சகாக்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது தான் முக்கியம் என்பது ஒரு தோல்வியடையும் அரசாங்கத்தையே கொடுக்கும்,” என்று அமைச்சரவையை அறிவித்தபின் தனது கட்சிக் கூட்டத்தில் குறிப்பிட்டார் எடி ராமா.
தமது தனிப்பட்ட விருப்பங்களை வென்றெடுப்பதற்கே பெரும்பாலானோர் அரசியலுக்கு வருகிறார்கள். தனது ஆதரவாளர்களுக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் அரசியலில் இருக்கலாகாது. கால்பந்தாட்டக் குழுவின் ஆதரவாளர்களை உதாரணமாகக் குறிப்பிடும் எடி ராமா, அந்த ஆதரவாளர்கள் தமது தனிப்பட்ட ஆசைகளுக்காக குழுவுக்கு ஆதரவு கொடுப்பதில்லை, என்கிறார்.
ஐரோப்பாவின் ஏழை நாடு என்று குறிப்பிடப்படும் அல்பானியா யூகோஸ்லாவியக் குடியரசிலிருந்து பிரிவடைந்த நாடாகும். அமெரிக்காவின் மிக நெருங்கிய அரசியல் நண்பனாகும். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேற்றி வந்தவர்களில் 4,000 பேரை அகதிகளாக ஏற்றுக்கொள்கிறது அல்பானியா.
சாள்ஸ் ஜெ. போமன்