செப்டெம்பர் இறுதியில் சுவீடனில் கொவிட் 19 கட்டுப்பாடுகள் முழுவதுமாக அகற்றப்பட்டு சமூகம் வழமைக்கு வரும்.
சுவீடனில் சமீப காலத்தில் கொரோனாத் தொற்றுக்கள் பெருமளவு குறைந்து இறப்புக்களும் மிகக்குறைவாகியிருக்கின்றன. தடுப்பு மருந்துகளும் பெரும்பாலானவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கொவிட் 19 தொற்றால் கடும் சுகவீனமடைந்து அவசரகாலப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறவர்கள் தொகை மிகக்குறைவாகவே இருக்கிறது.
எனவே, சுவீடன் தொற்றுநோய் ஆபத்து நிலைமையைக் கடந்துவிட்டதாகக் கணிக்கப்பட்டுச் சமூகத்தினுள்ள் இருக்கும் கட்டுப்பாடுகள் செப்டெம்பர் 29 ம் திகதி முதல் நீக்கப்படும். தற்போது இருக்கும் கட்டுப்பாடுகள் உணவகங்களில் விலகியிருக்கவேண்டும், பொது நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்கள் இருக்கலாம் போன்றவையும் முடிந்தவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்பதும் ஆகும். அவை, அத்திகதிக்குப் பின்னர் கட்டுப்பாடுகளாக இருக்காது.
முடிந்தவரை விலகியிருத்தல், நெருக்கமாகக் கூடாதிருத்தல் மற்றும் கைகளை சுத்தமாகக் கழுவியிருத்தல் ஆகியவை தொடர்ந்தும் கைக்கொள்ளவேண்டியவையாக அறிவுறுத்தப்படுகின்றன.
வெளிநாடுகளுடனான எல்லைகள் பற்றிய முடிவுகள் அந்தந்த நாடுகளின் கொவிட் 19 பரவல் நிலைமையைக் கவனித்து அவ்வப்போது எடுக்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்