தமது நிலத்துக்கான பழங்குடியினரின் உரிமைகளில் பகுதியைப் பறிக்க முயலும் பிரேசில் ஜனாதிபதி.
வர்த்தகத்துக்காக அமேஸான் காடுகளை அழித்து வருவதை ஆதரிக்கும் பிரேசிஸ் ஜனாதிபதி பொல்சனாரோ அக்காடுகளில் தங்கச் சுரங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தையும் நிறைவேற்றும் எண்ணத்திலிருக்கிறார். அதற்காக நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் அவர் போட்டிருக்கும் வழக்கு நாட்டின் பழங்குடியினரின் நிலங்கள் பற்றியதாகும்.
1988 இல் ஏற்படுத்தப்பட்ட பிரேசிலின் தற்கால அரசியலமைப்புச் சட்டம் அமேஸான் காடுகளின் பழங்குடியினரின் மூதாதையர்களின் நிலங்கள், வாழும் நிலங்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டவை என்கிறது. அந்த நிலத்தில் அரசாங்கம் உரிமை கொண்டாடி வேறெதையும் செய்ய முடியாது. அந்த நிலங்கள் கனிப்பொருட்களைக் கொண்டிருக்கின்றன. தங்கமும் அவைகளில் ஒன்று. அந்தச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து அந்தச் சமயத்தில் அங்கே வாழாத பழங்குடியினரின் நிலத்துக்கான உரிமையை ரத்து செய்யவேண்டுமென்று கோரியே பொல்சனாரோவால் அந்த வழக்கு போடப்பட்டிருக்கிறது.
அதைத் தவிர, பழங்குடியினர் எதிர்காலத்தில் தமது மூதாதையர்கள் வாழ்ந்த ஆதாரங்கள் காட்டி மேலதிக நிலப்பிராந்தியத்தை தமது தனிக்காப்ப நிலமாகக் கோர அனுமதிக்கலாகாது. ஏற்கனவே பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தனிக்காப்ப நிலத்தையும் அரசு அந்த நிலம் பாதுகாக்கப்படவேண்டியதில்லை என்று கருதினால் ரத்து செய்து கையகப்படுத்தலாம்.
1964-1985 பிரேசிலைக் கையகப்படுத்தி ஆண்ட இராணுவச் சர்வாதிகாரிகள் அமேசான் பிராந்தியத்தை அழித்துப் பொருளாதாரத்தை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அதனால், அங்கிருந்து பல்லாயிரக்கணக்கில் பழங்குடியினர் துரத்தப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். துரத்தப்பட்டவர்கள் 1988 இல் வேறிடங்களிலிருந்து தமது மூதாதையரின் நிலத்துக்குத் திரும்ப விரும்பினால் அவர்களுக்கு அது கிடைக்காது என்பது பொல்சனாரோவின் வழக்கின் ஒரு விளைவாகும்.
உச்ச நீதிமன்றத்தில் நடக்கவிருக்கும் வழக்கை எதிர்த்துத் தமது உரிமைகளைப் பறிக்கலாகாது என்று கோரிப் பல்லாயிரக்கணக்கான பழங்குடியினர் தலைநகரில் ஊர்வலங்களை நடத்தி வருகிறார்கள். நீதிமன்றம் பொல்சனாரோவின் விருப்பப்படி முடிவெடுத்தால் தமது நிலத்துக்கான உரிமைகள் பறிக்கப்படும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
ஏற்கனவே அமேசான் காடுகளில் சட்டத்துக்கெதிரான தங்கச் சுரங்கங்களை இயக்கி வருகிறார்கள் பலர். ஜனாதிபதியின் மறைமுகமான ஆதரவு அவர்களுக்கு இருப்பதால் பழங்குடியினர் எதிர்த்தாலும் அவர்களைத் தாக்கி, மிரட்டி வருகிறார்கள் சுரங்க உரிமையாளர்கள். அனுமதியின்றிக் களவாக இயங்கும் சுமார் 4,500 க்கும் அதிகமான தங்கச் சுரங்கங்கள் அக்காடுகளில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்