ஆண்களுக்கான US Open டென்னிஸ் கோப்பையை வென்றார் டானீல் மெட்வெடேவ்.
இவ்வருட US Open கோப்பைக்கான பெண்கள் இறுதிப்போட்டிக்கு இணையாக ஆண்களுக்கிடையேயான மோதலும் இருந்தது. 1969 இல் ரொட் லேவர் மட்டும் வென்றெடுத்த “வருடத்தில் மொத்தக் கோப்பைகளுக்கான வெற்றியைச்” [the calendar Grand Slam]சுவைக்கத் திட்டமிட்டிருந்த நோவாக் யோக்கோவிச்சை மூன்று விளையாட்டுக்களிலும் (6–4, 6–4, 6–4) வென்று கோப்பையைக் கைப்பற்றினார் டானீல் மெட்வெடேவ்.
பிரான்ஸ், ஆஸ்ரேலியா, விம்பிள்டன் கோப்பைகளை இவ்வருடம் வென்றிருக்கும் யோக்கோவிச் அமெரிக்கக் கோப்பையையும் வென்றிருப்பின் ரொட் லேவர் மட்டும் செய்திருக்கும் சாதனையான நான்கு கண்டங்களின் கோப்பைகளையும் ஒரே வருடத்துக்குள் வென்றவர் என்ற பெயரைப் பெற்றிருப்பார். 2 மணி 17 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடந்த மோதலின் கடைசிப் பந்தை மெட்வெடேவ் அடித்தபோது மனமுடைந்து தனது கைத்துண்டுக்குள் முகத்தை மூடிக்கொண்டு வெதும்பினார் 34 வயதான யோக்கோவிச்.
யோக்கோவிச் சரித்திரத்தில் இடம்பெறுவாரென்று எதிர்பார்த்து அந்த மோதலைப் பார்க்க வந்திருந்தவர்களோ மெட்வெடேவின் பக்கம் இருக்கவில்லை. விளையாட்டின் முடிவை நெருங்கும்போது அவரை ஏளனம் செய்து கூவினார்கள். வெற்றிபெற்ற மெட்வெடேவ் நிலத்தில் முழுசாக விழுந்து தன் வெற்றியைச் சுவைத்தார்.
“பார்வையாளர்களான நீங்கள் எதை எதிர்பார்த்து வந்தீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்கள் எதிர்பார்ப்பை வீணடித்ததற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் பணிவுடன் மெட்வெடேவ்.
தன்னிடம் மோதிய யோக்கோவிச்சைப் பணிவுடன் பாராட்டவும் அவர் தயங்கவில்லை. “என்னைப் பொறுத்தவரை நீங்கள் தான் இதுவரை நான் பார்த்தவர்களில் மிகச் சிறந்த டென்னிஸ் விளையாட்டுக்காரர். கடைசிப் போட்டியில் உங்களிடம் இன்னொரு தடவை மோத எனக்குப் பயமாக இருக்கும். உங்களிடம் நான் தோற்பேனானால் அது என் தன்னம்பிக்கையை முழுவதுமாகச் சிதைத்துவிடும்,” என்றார் அவர்.
சாள்ஸ் ஜெ. போமன்