சீனாவின் தூதுவர் பாராளுமன்றத்துக்குள் நுழையக்கூடாது என்று தடுத்தது ஐக்கிய ராச்சியம்.
ஐக்கிய ராச்சியத்துக்கான சீனாவின் தூதுவர் ஷெங் ஷெகுவாங் தமது பாராளுமன்றத்துக்குச் செய்யவிருந்த விஜயத்தை ரத்து செய்து அவரை உள்ளே வரலாகாதென்று அறிவித்திருக்கிறது சபாநாயகர் லிண்சி ஹொய்ல். ஐக்கிய ராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேருக்குச் சீனா கட்டுப்பாடுகள் விதித்திருக்கும் இந்தச் சமயத்தில் ஷெங் ஷெகுவாங் பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைவது விரும்பந்தகுந்ததல்ல என்று அவர் அறிவித்திருக்கிறார்.
சீனா தனது ஷிங்ஷியாங் மாநிலத்தில் வாழும் சிறுபான்மையினரான உகூரர்களைக் கையாளும் விதம் பற்றிய கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த ஐக்கிய ராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது மார்ச் மாதத்தில் கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.
அது கனடா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட அதே நடவடிக்கைக்குப் பொறுப்பான சீன அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது தடைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதை அடுத்தே சீனா ஐக்கிய ராச்சியப் பா.உ-க்கள் மீது அக்கட்டுப்பாடுகளை விதித்தது.
“நாங்கள் குறிப்பிடுவது சீனாவின் தூதுவர் பாராளுமன்றத்துக்குள் நுழையக்கூடாது என்றுதான். அவர் ஏற்கனவே திட்டமிட்டிருந்த பேச்சுவார்த்தைகளை வேறெங்காவது ஒரு இடத்தில் நடத்த ஒழுங்கு செய்யப்படும்,” என்று சபாநாயகர் லிண்சி ஹொய்ல் தமது நிலைப்பாட்டை விளக்கினார்.
“இது ஒரு கோழைத்தனமான செயல். அச்செயல் பிரிட்டிஷ்காரர்களின் விடயங்களுக்குப் பாதிப்பாகவே இருக்கும்,” என்று சீனாவின் தூதுவராலயம் தனது பதில் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்