நியூயோர்க்குக்கு, ஐ.நா-மா நாட்டுக்கு, வரவிருக்கும் சர்வதேச தலைவர்களிடம் தடுப்பூசிச் சான்றிதழ் கேட்பதா, இல்லையா?
ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர உயர்மட்டத் தலைவர்கள் மாநாடு அடுத்த வாரம் அதன் நியூயோர்க் அலுவலகத்தில் நடக்கவிருக்கிறது. பங்குகொள்ள வரவிருப்பவர்கள் உலக நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள். எவராயினும் தாம் தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட சான்றிதழ் காட்டவேண்டுமென்று நியூயோர்க் நகர அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். உலகத் தலைவர்களிடம் கொவிட் 19 போட்டுக்கொண்டதாக சான்றிதழ் இருக்கிறதா என்று கேட்கமுடியாது என்கிறார் ஐ.நா-வின் காரியதரிசி அந்தோனியோ குத்தேரஸ்.
மான்ஹட்டனிலிருக்கும் ஐ.நா காரியாலயம் சர்வதேசப் பிராந்தியமாகக் கருதப்படுகிறது. அதற்குள் அமெரிக்கச் சட்டங்கள் செல்லுபடியாகாது. ஆயினும், நடந்துகொண்டிருக்கும் கொவிட் 19 பரவலைச் சுட்டிக்காட்டி அங்கே வருபவர்கள் எல்லோரும் நாட்டின் கட்டுப்பாடுகளை மதிக்கவேண்டுமென்று அந்தோனியோ குத்தேரஸ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
நடக்கவிருக்கும் ஐ.நா-வின் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கவிருப்பவர் மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாகித் ஆகும். அவர் அந்தப் பொதுக் கூட்டத்துக்கு வரவிருப்பவர்களெல்லோருக்கும் ஏற்கனவே எழுதி, கூட்டத்தில் பங்கெடுக்கவிருக்கிறவர்கள் தடுப்பூசிச் சான்றிதழைப் பெற்றிருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஐ-நா-வின் பொதுக்கூட்டத் தலைவராக மாலைதீவின் தலைவர் பங்கெடுப்பது இதுவே முதல் தடவையாகும்.
தடுப்பு மருந்துகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘உலகளவிலிருக்கும் ஏற்றத்தாழ்வை அம்மருந்துகளின் விநியோகமே காட்டுவதாகச்’ சுட்டிக் காட்டினார் குத்தேரஸ். 5.7 பில்லியன் தடுப்பூசிகள் உலகில் போடப்பட்டிருக்கின்றன. அவைகளில் 2 % மட்டுமே ஆபிரிக்க நாடுகளுக்குக் கிடைத்திருக்கின்றது.
ஐ.நா-வின் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பவர்களுக்காக அக்கட்டடத்தின் வாசலிலேயே ஜோன்சன் நிறுவனத்தின் ஒற்றைத் தடுப்பூசி மருந்து கிடைக்கச் செய்யவிருப்பதாக நியூ யோர்க் ஆளுனர் பில் டி பிளாசியோ கூறியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்