ஆப்கானிஸ்தானில் “அறம், தூய்மை பேணும் அமைச்சு” அமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மட்டும் பணியாற்றுவார்கள்.
தலிபான்களின் அமைப்பு ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியச் சட்டங்கள் பேணப்படுவதை ஒழுங்குசெய்வதற்காக “அறம், தூய்மை பேணும் அமைச்சு” (Ministry of Evil and Virtue) என்ற ஒரு அதிகாரத்தை உண்டாக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறது. அந்த அமைச்சின் கீழ் ஆண்கள் மட்டுமே பணியாற்றுவார்கள்.
இதுவரை நாட்டிலிருந்த பெண்கள் அபிவிருத்தி அமைச்சரகம் தொடர்ந்தும் செயற்படுமா என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை. அந்த அமைச்சரவையின் கீழ் பெண்களே பெரும்பாலும் பணியாற்றினார்கள்.
சமீப நாட்களில் ஆப்கானிஸ்தானின் உயர்கல்வி அமைச்சர் அப்துல் பக்கி ஹக்கானி பெண்கள் தொடர்ந்தும் உயர்கல்விகளில் ஈடுபடலாம். உயர் கல்வி ஸ்தாபனங்கள் அதற்கான வகுப்புக்களில் ஆண், பெண்கள் என்று பிரிவு உண்டாக்கும், பெண்கள் இஸ்லாமிய ஷரியாச் சட்டங்களுக்கிணங்கிய ஆடைகள் அணிந்திருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அமைக்கப்பட்டிருக்கும் புதிய அமைச்சு தலிபான்கள் மீண்டும் முன்னர் போலப் பழமைவாதத்தை நோக்கித் திரும்புவதையே காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் செயற்பட்டுவந்த, உலக வங்கியின் கிராமப்புறங்களில் வாழும் பெண்கள் அபிவிருத்திக்காக அமைப்பு தனது சேவைகளை அந்த நாட்டில் நிறுத்திவிட்டதாக அறிவித்திருக்கிறது. சனியன்று அந்த அமைப்பின் வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்