ஐரோப்பாவின் மேலுமொரு வெளிவிவகார அமைச்சரை ஆப்கானிஸ்தான் வெளியேற்றம் காவு கொண்டது.
பிரிட்டிஷ் பிரதமர் தனது அமைச்சர்களை ஒரு குலுக்கிக் குலுக்கிச் சிலரை வெளியேற்றிச் சிலரைப் பின்தள்ளியும் விட்டார். அவர்களில் வெளிவிவகார அமைச்சராக இருந்த டொமினிக் ராப் பின்னுக்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட அதே தருணத்தில் நெதர்லாந்துப் பாராளுமன்றமும் தனது வெளிவிவகார அமைச்சரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து வெளியேற்றியது.
ஆப்கானிஸ்தானிலிருந்து தமது நாட்டவரை வெளியேற்றும் விடயத்தில் அமெரிக்கா உட்பட்ட அனேகமான எல்லா நாட்டின் வெளிவிவகார அமைச்சர்களும் விமர்சனத்துக்குள்ளானார்கள். பிரிட்டனின் டொமினிக் ராப் அந்தச் சமயத்தில் குடும்பத்தினருடன் விடுமுறையில் இருந்தார். அவரைத் தொடர்புகொண்டு முடிவுகள் எடுப்பது அவரது திணைக்களத்தினருக்குப் பிரச்சினையாக இருந்தது.
நெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் சீகிரிட் காக் [Sigrid Kaag] தனது மெத்தனமான முடிவெடுப்புக்கள் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்த நெதர்லாந்துக் குடிமக்களெல்லாரையும் கூட அங்கிருந்து சமயத்தில் வெளியேற்ற ஒழுங்குகள் செய்யாததுக்காகக் கடும் விமர்சனத்துக்குள்ளாகினார். வியாழனன்று இரவு அவர் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் நெதர்லாந்து பின்தங்கியிருந்தது. முதலாவதாக அங்கிருந்து வெளியேறிய விமானம் வெறுமையாகத் திரும்பியது. அதன் பின்பு 2,100 பேரைப் பக்கத்து நாடுகளுக்கும் 1,200 பேரைத் தனது நாட்டுக்கும் கொண்டுவந்தது. நாட்டின் பாராளுமன்றம் பல மாதங்களுக்கு முன்னரே ஆப்கானிஸ்தானிலிருந்த அவர்களுடைய 22 மொழிபெயர்ப்பாளர்களை வெளியேற்றும்படி கோரியும் அமைச்சர் அம்முடிவை எடுக்காததால் அவர்களை வெளியேற்ற முடியாமலே போயிற்று.
நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அங்க் பிய்லவெல்ட் மீதும் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அவர் பதவி விலக மறுத்துவிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்