அகதிகள் வெள்ளத்தை எதிர்நோக்கமுடியாமல் அமெரிக்காவில் டெக்ஸாஸ் எல்லை டெல் ரியோ மூடப்பட்டது.
டெல் ரியோ நகரிலிருக்கும் மெக்ஸிகோவுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு எல்லை வெள்ளியன்று மூடப்பட்டது. காரணம் பல்லாயிரக்கணக்கான அகதிகள் சமீப நாட்களில் அந்த எல்லையினூடாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததாகும்.
இரண்டு நாடுகளுக்கும் இடையேயான எல்லையையொட்டி ஓடும் டெல் கிராண்டே நதியினூடாக அகதிகள் டெல் ரியோ நகரத்தை அடைந்திருக்கிறார்கள். அந்த நதிப்பாலத்தி ஒரு அகதிகள் முகாமே உண்டாகி சுமார் 35,000 பேர் அப்பகுதியில் குவிந்துவிட்டிருப்பதாகத் தெரிகிறது.
பெரும்பாலான அந்த அகதிகள் ஹைட்டியைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் நாட்டின் ஜனாதிபதி கொல்லப்பட்டது, மிகப்பெரிய புயலாலும், சூறாவளியால் பாதிக்கப்பட்டது ஆகியவற்றால் அங்கிருந்து வெளியேறிய அகதிகள் மெக்ஸிகோவினூடாக அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள். மெக்ஸிகோ அவர்களைத் தனது நாட்டில் தங்க அனுமதிப்பதில்லை. அவர்கள் எல்லையினூடாக அமெரிக்காவுக்குள் நுழைய முடியாமல் திரும்பி மெக்ஸிகோவுக்குள் நுழைய அங்கும் தடைசெய்யப்படுகிறார்கள். அவர்கள் அங்கே அகப்படுவதை வைத்துக் குடில்கள் கட்டி, உடைகளை நதியில் தோய்த்துக் குளித்து வாழத்தொடங்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
அங்கே ஒரு எல்லையே இல்லாததுபோல ஆகிவிட்டதாகக் குறிப்பிடுகிறார் அப்பகுதியின் ரிப்பப்ளிகன் கட்சி ஆளுனர் டொனி கொன்ஸாலஸ்.
அவர்களையெல்லாம் மீண்டும் விமானம் மூலம் திருப்பியனுப்புவதற்கு அமெரிக்க அரசு திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. விபரங்களை வெளியே விடாமல் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். வரும் நாட்களில் தினசரி 5 – 8 விமானங்களில் அவர்களை ஏற்றி அவர்களது நாடுகளுக்குத் திருப்பியனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
சாள்ஸ் ஜெ. போமன்