உணவக வெளி இருக்கைக்குள் காரைச் செலுத்திய இளம் பெண். பாரிஸ் புறநகரில் ஆறுபேர் காயம்.
குழப்பமான மன நிலையுடன் வாகனங்களைச் செலுத்துவோர் வீதியில் மட்டும் தான் விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர் எனக் கூறிவிட முடியாது.தொலை வில் வீதியோரங்களுக்கு அப்பால் உள்ளவர்களும் ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடுகிறது.
வீதியில் வந்த கார் ஒன்று அங்கிருந்துவிலகி சற்றுத் தள்ளிச் சென்று உணவகம் ஒன்றின் வெளி இருக்கைக்குள் புகுந்தது. அங்கு ஆற அமர உணவு அருந்திக் கொண்டிருந்தவர்களில் பலர் காரினால் மோதித் தள்ளப்பட்டனர். அவர்களில் காயமடைந்த ஆறு பேர் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பாரிஸுக்குத் தென் கிழக்கே பிரபலமானஅரண்மனை அமைந்திருக்கும் Fontainebleau நகரில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கார் சுமார் 40 கிலோ மீற்றர்கள் வேகத்தில் உணவக மேசைகள் மீது மோதியதாக சம்பவத்தை நேரில்கண்டவர்கள் கூறியுள்ளனர்.அதிர்ஷ்டவசமாக எவரும் உயிரிழக்கவில்லை.
காரைச் செலுத்தி வந்த இளம் பெண் ஒருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.அவர் மனநிலைக் குழப்பத்தில் காணப்பட்டார் என்று கூறப்படுகிறது. அவரது குழப்பத்துக்குப் போதைப் பாவனையா அல்லது மன அழுத்தமா காரணம் என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. பயங்கரவாத நோக்கங்கள் இருப்பதற்கான சான்றுகள் ஏதும் இல்லை என்று பொலீஸார் கூறியுள்ளனர்.சாரதியான பெண் அவசர உளவியல் சிகிச்சைப் பிரிவில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
குமாரதாஸன். பாரிஸ்.