உடலில் நீடிக்கும் வைரஸ் பாதிப்புகள் பிரான்ஸ் கராத்தே வீராங்கனையின் உலக சம்பியன் கனவு கலைகின்றது!

மூன்று தடவைகள் ஐரோப்பிய சம்பியனாகத் தெரிவாகியவர் கராத்தே வீராங்கனை ஆன் லோரே புளோரென் ரின் (Anne-Laure Florentin).

பிரான்ஸின் நம்பிக்கை நட்சத்திரமான அவரது அடுத்த இலக்காக இருந்தது உலக சம்பியன் பட்டம். ஆனால் அவரது அந்தக் கனவைச் சிதைத்து விட்டுள்ளது கொரோனா வைரஸ்.

வைரஸின் நீண்டகாலத் தாக்கங்களால்நிலைகுலைந்துள்ள அந்த வீராங்கனை, ரோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்த்தவேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவைத் தொலைத்துவிட்டு துவண்டு கிடக்கிறார்.

‘கோவிட்’ வைரஸ் முடிந்து விடலாம். டெல்ரா தொற்றுக்களையும் உலகம் கட்டுப்படுத்தி வெற்றி காணலாம்.ஆனால் வைரஸ் தாக்கியவர்கள் அதன்நீண்ட காலப் பாதிப்புகளில் இருந்து மீள்வது எப்போது ?

ஆரம்பத்தில்’கோவிட் 19′ கொரோனாவின் தாய் வைரஸின் தொற்றுக்கு இலக்காகி அதிலிருந்து மீண்ட பலர்அதன் நீண்ட காலப் பக்க விளைவுகள்காரணமாக அவதியுற்று வருகின்றனர்.அத்தகையோரில் ஒருவரே வீராங்கனை ஆன் லோரே புளோரென்ரின்.

தங்களைத் தினமும் துன்புறுத்துகின்றபல உடல் உபாதைகளோடு வாழ்வைக் கழிக்கின்ற பலரும் என்ன சொல்கிறார்கள்?”Long Covid” என்கின்ற கொரோனா வைரஸின் நீண்டகாலப் பாதிப்புகள் எவை? அவற்றால் அவதியுறும் சிலர்கூறுகின்ற சோகக் கதைகள் என்ன?”

பிரான்ஸ் 24″ தொலைக்காட்சியில் வெளியாகிய ஒரு செய்தித் தொகுப்பின் தமிழ் சாராம்சம் இது.

.🔴இதயத் தசை வீக்கம் பிரான்ஸின் புகழ் பெற்ற தற்காப்புக் கலை வீராங்கனை ஆன் லோரே புளோரென்டின் கடந்த ஆண்டு ஒக்ரோபரில் கொரோனா தொற்றுக்கு இலக்கானார். நோயின் அறிகுறிகள் எதுவும்பெரிதாக இல்லை. ஆனால் அப்போதுமுதல் அவரது இதயம் பாதிக்கப்படத்தொடங்கியது. “myocarditis” எனப்படும்இதயத் தசை வீக்கம் வெளிப்பட்டது.சாதாரண உடற்பயிற்சி கூட பெரும்களைப்பை ஏற்படுத்துகின்ற நிலை அது.ஆன் லோரே புளோரென்டின் தற்போது கடுமையான கராத்தே பயிற்சிகளைச் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்.அவரது உடல் எடையும் குறைந்திருக்கிறது. கொரோனா வைரஸின் ஆரம்பநாட்களில் அது சுவாசத் தொகுதியைமட்டுமே தாக்குகின்ற ஒரு நோயாகப்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகு அது உடல் உறுப்புகள் பலவற்றையும் தாக்கி நீண்டகால உபாதைகளைத் தரவல்லது என்ற உண்மை தெரியவர ஆரம்பித்துள்ளது.

🔴அதீத தூக்கம், எடை குறைதல் கரீன் பீற்றர்(Karyne Peter) என்ற பெண் ணும் அவரது இரண்டு பிள்ளைகளானமெய்லி (Meïly – 18) மெனோவா(Mànoa-12),மூவரும் நீண்டகால கொரோனா தாக்கங்களால் அவதியுறுகின்றனர். 18 வயதானமெய்லிக்கு 18 கிலோ எடைக்குறைவுடன்மூன்று மாதங்களை மருத்துவமனையில்கழிக்க நேர்ந்தது.

12 வயதான மெனோவா கட்டிலுக்குச் சென்றதும் பல வித சோர்வுகளால் அபரிமிதமான தூக்கத்தில் ஆழ்ந்து விடுகிறாள். hypersomnia என்கின்ற அளவுக்கு அதிகமான தூக்கம் மற்றும் brain fog போன்றவற்றால் சோர்வடைகிறாள். இவை கொரோனா வைரஸின்நீண்டகாலப் பாதிப்புகளாக அவளைத் தொடர்ந்து தாக்கி வருகின்றன. தனது குழந்தைகளது இவ்வாறான நீண்ட கால கோவிட் பாதிப்புகளுக்கு மருத்துவர்களது அங்கீகாரத்தைப் பெறுவதற்காக தாயார் கரீன் பீற்றர் சுமார் ஓராண்டு காலம் போராட்டம் நடத்த வேண்டி வந்தது. பிரான்ஸ் அரசு இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் வைரஸின் நீண்ட கால விளைவுகளை “நோய்களாக” அங்கீகரித்திருக்கிறது.ஆனாலும் குழந்தைகள் பற்றி அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. குழந்தைகளை கொரோனா தாக்காது என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. நம்பப்பட்டது.

வளர்ந்தவர்களை மட்டுமே மருத்துவர்கள் கணக்கில் எடுத்தனர்.ஆனால் தொற்றின் அறிகுறிகள் எதனையும் வெளிப்படுத்தாத குழந்தைகள் பின்னாளில் வேறு சில உடற்பாதிப்புகளுக்கு இலக்காவது உலகெங்கும் அவதானிக்கப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து விடுபட்டாலும் ஆறு மாதங்களோ ஒருவருடமோ அதற்கும் கூடிய காலமோ நீண்ட பக்க விளைவுகளால் அவதிப்படுவோர் விடயத்தில் மருத்துவ உலகம் தீவிர கவனத்தைத் திசைதிருப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

வைரஸ்களின் நீண்ட காலப் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான கிளினிக் வசதிகளை உருவாக்குவதற்கும் நிதி ஒதுக்கப்படவேண்டும் என்று பிரான்ஸின் மருத்துவஆய்வாளர்கள் அரசிடம் கேட்டிருக்கின்றனர்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *