“வெளிநாடுகளுக்கு இனிமேல் நிலக்கரிச் சக்தி நிலையங்களுக்காகக் கடனில்லை,” என்கிறது சீனா.
உலகின் பணக்கார நாடுகளான G 7 நாடுகளின் காலடித்தடத்தைத் தொடர முடிவெடுத்திருக்கிறது சீனா, காலநிலையை நச்சாக்கும் நிலக்கரி எரிசக்தி நிலையங்களுக்குக் கடன் கொடுப்பதில்லை என்ற விடயத்தில். ஆனால், தனது நாட்டுக்குள் அதைத் தொடர்ந்தும் சில காலத்துக்குச் செய்யவிருக்கிறது சீனா.
உலகில் நிலக்கரியை அதிகம் உபயோகப்படுத்தும் முதல் மூன்று நாடுகள் சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகியவையே. ‘வறிய நாடுகள் தமது எரிசக்தி நிலையங்களைக் காலநிலையை வெம்மையாக்காத தொழில்நுட்பங்களுக்கு மாற்றிக்கொள்வதற்காக உதவும் தொகையை 11.4 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதாக ஜோ பைடன் அறிவித்ததை அடுத்தே சீனாவின் தலைவர் ஷீ யின்பிங் இந்தச் செய்தியை ஐ.நா-வின் பொதுச்சபையில் அறிவித்திருக்கிறார்.
உலகின் வளரும் மற்றும் வறிய நாடுகளுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்குக் கடன்கள் கொடுத்து வரும் சீனா இந்தோனேசியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் நிலக்கரி எரிசக்தி நிலையங்களை நிறுவவும், நடத்தவும் பெரும் கடன்களைக் கொடுத்திருக்கிறது. தவிர, உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் சமீபத்தில் காலநிலை வெம்மையாகுவதைத் தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்க சீனா மட்டும் பெருமளவில் எதையும் செய்யாததையிட்டுச் சர்வதேச அளவில் அதன் மீது விமர்சனங்களும் கடுமையாக இருக்கின்றன.
“வளரும் நாடுகள் தமக்குத் தேவையான சக்தியைச் சுத்தமான எரிசக்தி மூலம் பெற்றுக்கொள்வதற்கான திட்டங்களுக்குச் சீனா உதவும்,” என்று ஐ.நா-வில் குறிப்பிட்டிருக்கும் ஷீ யின்பிங் அதுபற்றி மேலதிக விபரங்களெதையும் தெரிவிக்கவில்லை.
பாரிஸில் 2015 இல் நடந்த காலநிலை வெம்மை தடுத்த மாநாட்டுக்குப் பின்பு நவம்பரில் கிளாஸ்கோவில் நடக்கவிருக்கும் COP26 மாநாட்டில் உலக நாடுகள் அதுபற்றிய மேலதிகத் திட்டங்களை வகுக்கக் கூடவிருக்கின்றன. சுருக்கமாக, சீனத் தலைவர் தமது எண்ணத்தை அறிவித்திருந்தாலும் அந்த மாநாட்டில் விபரங்களை வெளியிடலாம் என்று நம்பப்படுகிறது.
சீனத் தலைவரின் மேற்கண்ட அறிவித்தல் உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்