அமெரிக்கா – கனடா – சீனாவின் முக்கோண ராஜதந்திரச் சிக்கல் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
சீனாவின் தொழில்நுட்பச் சுறா ஹுவாவேயின் உயரதிகாரி மெங் வாங்சூ[Meng Wanzhou] கனடாவிலிருந்து வெளியேறியதும், கனடாவில் உளவுபார்த்ததாகக் குற்றஞ்சாட்டிச் சிறைவைக்கப்பட்டிருந்த கனடாவின் குடிமக்கள் இருவரையும் சீனா விடுவித்திருக்கிறது. முன்னாள் ராஜதந்திரி, தொழிலதிபர் ஆகிய அவ்விருவரும் கனடாவை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்திருப்பதாகக் கனடாப் பிரதமர் டுருடூ தெரிவித்தார்.
இதன் மூலம் அமெரிக்கா, கனடா, சீனா ஆகிய நாடுகளுக்கிடையே மூன்று வருடங்களாக நடந்துவந்த ராஜதந்திரச் சிக்கலொன்று முடிவுக்கு வந்திருக்கிறது. கனடாவுக்குச் சென்றிருந்த மிங் வாங்சூவை அமெரிக்க அரசின் வேண்டுகோளின்படியே தான் கனடா கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருந்தது.
அமெரிக்க அதிகாரிகளுடன் சட்டரீதியான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்ட பின்னரே மிங் வாங்சூ தனது வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவ்விடுதலையின் மூன்று மணித்தியாலங்களின் பின்னர் சீனா தான் சிறையில் வைத்திருந்த கனடியர்களை விடுவித்ததாக அறிவித்தது.
ஹுவாவேய் நிறுவனம் தனது கைப்பேசிகளிலிருக்கும் தொழில் நுட்பத்தைச் செதுக்கி அவை மூலமாக அமெரிக்காவின் தொலைத்தொடர்புகளின் மீது ஒற்றுவேலை பார்த்ததாக அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டியிருந்தது. அத்துடன் அந்த நிறுவனம் தனது கணக்குகளிலும் தில்லுமுல்லுகள் செய்திருந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
ஹுவாவேய் நிறுவனத்தின் மீதான அமெரிக்கக் குற்றச்சாட்டுகள் விபரங்கள் வெளியானதை அடுத்து அந்த நிறுவனம் தொடர்ந்தும் தமது நாடுகளில் தொலைத்தொடர்பு விஸ்தரிப்புக்கள் செய்வதைப் பல நாடுகள் தடுத்து நிறுத்தியிருக்கின்றன.
கனடியர்களிருவரைக் கைது செய்ததற்கும் மெங் வாங்சூவைக் கனடா வீட்டுக்காவலில் வைத்திருப்பதற்கும் சம்பந்தமில்லை என்றே இதுவரை சீனா மறுத்து வந்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்