ஹெராத் நகரின் சதுக்கங்களில் கொலைத்தண்டனைக்கு உள்ளானவர்களைக் கட்டித் தொங்கவிடுகிறார்கள் தலிபான்கள்!
குற்றஞ்செய்த நால்வரைக் கொன்ற தலிபான் இயக்கத்தினர் இறந்துபோனவர்களின் உடல்களை ஆப்கானிஸ்தானின் மேற்கிலிருக்கும் ஹெராத் நகரின் வெவ்வேறு இடங்களில் தூக்கிக் கட்டியிருக்கிறார்கள். இரத்தம் தோய்ந்த சடலங்களின் படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவியிருக்கின்றன.
உள்ளூர் தொழிலதிபர் ஒருவரையும் அவரது மகனையும் நால்வர் நகரிலிருந்து கடத்திச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் நகரின் எல்லையொன்றிலிருந்த காவல் நிலையத்தில் தலிபான்களால் மறிக்கப்பட்டபோது இரு தரப்பாரிடையேயும் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது. அதில் அந்த நால்வரும் கொல்லப்பட்டு ஒரு தலிபான் இயக்கத்தவர் காயமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
“கடத்தல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு இதுதான் தண்டனை,” என்று அறிவிப்புப் பலகையுடன் அந்த நால்வரின் உடல்கள் தொங்கவிடப்பட்டதைக் கண்டவர்கள் அவ்விபரங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.
தலிபான்களின் ஆட்சிக்கு உள்ளாகியபின் இதுவே மிகப்பெரும் தண்டனையாக விதிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் அவ்வியக்கத்தினரின் தலைவர்களிலொருவர் தாம் உடனடியாகக் குற்றங்களுக்கான கடுமையான தண்டனைகளைக் கொடுக்க ஆரம்பிக்கப் போவதாகப் பேட்டியளித்திருந்தார். இஸ்லாமியச் சட்டங்களின்படி உடல் அங்கங்களை வெட்டுதல், கொலைத்தண்டனை, கசையடி ஆகியவைகள் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
“எவருக்கும் மற்றொருவரைக் கடத்தவோ, தொல்லை கொடுக்கவோ அனுமதியில்லை. அப்படியான செயல்களில் எங்கள் மக்களுக்கெதிராக ஈடுபடுபவர்களுக்கு இது போன்ற கடுமையான தண்டனைகளே விதிக்கப்படவிருக்கின்றன என்று எச்சரிக்கவே கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் மக்கள் காணக்கூடிய இடங்களில் கட்டித் தூக்கப்பட்டிருக்கின்றன,” என்று தலிபான்களின் அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்