மரண தண்டனைக்கெதிர்காகச் சிங்கப்பூரில் மக்கள் எதிர்ப்பு ஊர்வலம்.

சுமார் மூன்று வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாகச் சிங்கப்பூர் மரண தண்டனையொன்றைக் கடந்த வாரத்தில் நிறைவேற்றியிருக்கிறது. போதைப் பொருள் கடத்தல்காரனொருவனுக்கு நிறைவேற்றப்பட்ட அத்தண்டனைக்காக மேலும் சிலர் காத்திருக்கும் சமயம் சிங்கப்பூரில் சில நூறு பேர் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

பொலீசாரின் அனுமதியின்றிப் பொதுமக்கள் கூடித் தமது கருத்தைச் சொல்ல அனுமதிக்கப்படும் ஒரே இடமான “Speakers’ Corner” என்ற இடத்தில் அந்த எதிர்ப்புக் கூட்டம் நடந்தது. “கொலைத் தண்டனைகள் நாட்டில் பாதுகாப்பை உண்டாக்கப் போவதில்லை”, “எங்கள் பெயரில் கொலைகள் செய்யாதீர்கள்,” போன்ற சுலோகங்களை பிடித்துக்கொண்டு அங்கிருந்தவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

கடந்த வாரம் அப்துல் காதர் ஒத்மான் என்ற 68 வயதான போதை மருந்துக் கடத்தல்காரன் தூக்கில் தொங்கவிடப்பட்டான். அதை நிறுத்தும்படி கேட்டுக்கொண்ட ஐ.நா, மனித உரிமை அமைப்புக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற மனவியாதியுள்ள ஒரு நபர் அடுத்ததாகத் தூக்கிலிடப்படலாம் என்று கருதப்படுகிறது. போதை மருந்துக் கடத்தலுக்கே தர்மலிங்கமும் மரண தண்டனை பெற்றிருக்கிறார். மேலும், மூவரும் அதே குற்றத்துக்காக மரண தண்டனை நிறைவேற்றப்படக் காத்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *