ஹெரோயின் தயாரிக்கப் பயன்படும் கசகசாச் செடி விவசாயத்தை நிறுத்தும்படி தலிபான் தலைமை உத்தரவு.

தலிபான் இயக்கத்தினரின் அதிமுக்கிய ஆன்மீகத் தலைவர் என்று குறிப்பிடப்படும் ஹிபதுல்லா அகுந்த்ஸாதா ஆப்கானிஸ்தானில் ஹெரோயின் என்ற போதை மருந்தைத் தயாரிக்கப் பாவிக்கப்படும் கசகசாச் செடிகள் பயிரிடுதலை நிறுத்தும்படி உத்தரவிட்டிருக்கிறார்.

வெளிநாட்டுப் பிரதிநிதிகள், தலிபான் உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகை நிருபர்கள் பங்கெடுத்த ஒரு கூட்டத்தில் தலிபான்களின் பிரதிநிதியான ஸபியுல்லாஹ் முஜகீத் தெரிவித்த செய்தியில் “இத்தால் சகல ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்குத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் நாடு முழுவதிலும் கசகசாச் செடி விவசாயம் முற்றாகத் தடைசெய்யப்பட்டிருக்கிறது,” என்று குறிப்பிடப்பட்டது. 

அச்செடிப் பயிரிடுபவர்களின் விவசாயம் அழிக்கப்படுவதுடன் நபருக்கு ஷரியா சட்டப்படி தண்டனை விதிக்கப்படும் என்றும் அச்சட்டம் மேலும் குறிப்பிடுகிறது.

தலிபான் இயக்கத்தின் பணபலத்துக்கான மூலதனமாக இதே கசகசாச் செடி விவசாயமே பயன்பட்டதாக நீண்டகாலமாகக் குறிப்பிடப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் ஆட்சியிலிருந்து அவர்கள் வீழ்த்தப்பட்ட பின்னர் தமது போராட்டத்துக்கான செலவுக்காக அச்செடிகளைப் பயிரிடுபவர்கள் ஊக்குவிக்கப்பட்டு அவர்களிடம் வரிகள் அறவிடப்பட்டன. 

சர்வதேச ஹெரோயின், ஒப்பியம் ஆகியவற்றின் தயாரிப்பில் பெரும்பகுதி ஆப்கானிஸ்தானிலேயே நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது. தலிபான்களின் அரசு 2000 ம் ஆண்டு வீழ்த்தப்பட்ட பின் நாட்டின் விவசாயிகளை அந்தப் போதைப் பொருட்களின் பயிரிடலுக்குப் பதிலாக வேறு பயிர்களைப் பயிரிடும்படி அமெரிக்கா மற்றும் மனித உதவி அமைப்புக்கள் அங்கே முயற்சித்தன. ஆனாலும் அது பெருமளவில் வெற்றியளிக்கவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *