லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் சேவைகளில் மிக மோசமான நிலைமை.

உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் சுமார் மூன்று வாரங்களாக நிலைமை மிக மோசமாக இருப்பதாகப் பயணிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். பயணிகள் தமது பயணச்சீட்டைக் காட்டி விமான நிலையத்தின் உட்பகுதிக்குள் நுழைய சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் அதிகமாகிவிடுவதாகப் பலர் சமூகவலைத்தளங்களில் விமான நிலைய அதிகாரத்தைச் சாடியிருக்கிறார்கள்.

பயணச்சீட்டுகளைக் கவனிக்கும் தானியங்கிகள் செயற்பாட்டில் பிரச்சினை, பல விமானங்கள் நிறுத்தப்பட்டமை, கொவிட் பரவலால் அலுவலகர்கள் போதாமை ஆகியவை ஒரு பக்கமும் பெரும்பாலானோர் வெளிநாடுகள் செல்லும் ஈஸ்டர் விடுமுறை, கொரோனாக்காலம் கழிந்து பலர் பயணிக்க ஆரம்பித்தல் ஆகியவை இன்னொரு பக்கமும் சேர்ந்து விமான நிலையச் சேவைகளை நிலைகுலைய வைத்திருக்கின்றன. 

பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் 90 விமான சேவைகளையும், ஈஸிஜெட் 60 விமான சேவைகளையும் ரத்து செய்திருக்கின்றன. அவர்களின் ஊழியர்கள் பலர் கொவிட் 19 ஆல் சுகவீனமடைந்திருப்பதாலேயே விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. 

ஹீத்ரோ விமான நிலையம் மட்டுமன்றி மான்செஸ்டர் விமான நிலையத்திலும் பயணிகளின் காத்திருப்பு நிலைமை மோசமாக இருப்பதாகப் பல பயணிகள் படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். விமான நிலைய அதிகாரிகள் தாம் எதிர்பாராத அளவில் பல கோணங்களிலிருந்தும் பிரச்சினைகளை எதிர்கொள்வதால் ஏற்படும் தாமதத்துக்கு மன்னிப்புக் கோரியிருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *