அமெரிக்காவிடமிருந்து எட்வர்ட் ஸ்னௌடன் மறைந்திருக்க உதவிய சிறீலங்கா குடும்பத்துக்கு கனடா புகலிடம் வழங்கியது.
சுபுன் திலின கல்லபத்த, நடீகா தில்ருக்சி நோனிஸ் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளும் ஹொங்கொங்கில் அகதிகள் அந்தஸ்துக்காக விண்ணப்பித்து விட்டு அங்கே வாழ்ந்து வந்தார்கள். அமெரிக்காவிலிருந்து தப்பியோடிய எட்வர்ட் ஸ்னௌடன் ரஷ்யாவுக்குச் சென்று புகலிடம் பெறமுதல் ஹொங்கொங்கில் மறைவாக இருந்தபோது உதவிய அகதிகளில் இவர்களும் அடங்குவர்.
2013 இல் அமெரிக்கா எவருக்கும் செய்துவந்த கண்காணிப்புக்களைப் பகிரங்கப்படுத்தியவர் ஸ்னௌடன். அதனால் நாட்டுக்கு எதிரான குற்றம் செய்ததாக அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க முடிவெடுத்தது அமெரிக்கா. அதனால், அவரை உலகெங்கும் வலைவீசித் தேடியது அமெரிக்கா. அமெரிக்காவின் அதிகார பலத்துக்குப் பயந்து பல நாடுகளும் ஸ்னௌடனுக்கு உதவுவதைத் தவிர்த்தன.
ஸ்னௌடன் அமெரிக்காவின் கணவாய்க் கைகளுக்கு அகப்படாமல் ஒரு மனிதாபிமான அமைப்பு அவருக்கு உதவியது. அவர்கள் ஹொங்கொங்கில் இருந்த அகதிகள் ஏழு பேரின் (“Guardian Angels” )உதவியுடன் ஸ்னௌடனை அங்கே மறைவாக இருக்க வழி செய்தார்கள்.
ஏழு பேரில் கனடாவில் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த நால்வர் குடும்பம் தவிர ஹொங்கொங்கில் வாழும் ஒரு பிலிப்பைன்ஸ் தம்பதிகளும், சிறீலங்காவைச் சேர்ந்த மேலுமொரு முன்னாள் இராணுவ வீரரும் அடங்குவர். அந்த மூவருக்கும் கூட அகதிகள் அந்தஸ்தைக் கனடா வழங்கவேண்டுமென்று குறிப்பிட்ட மனிதாபிமான அமைப்பினர் கோரி வருகின்றனர்.
சுபுன் திலின கல்லபத்த, நடீகா தில்ருக்சி நோனிஸ் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளான செதும்தி, தினத் ஆகியோரும் டொரொண்டோவில் இருந்து தமது புதிய வாழ்விடமான மொன்ரியலுக்குச் சென்றிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்