அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் சேமிக்கும் சீன மக்கள்.

தைவானுடன் போர் மூளும் என்று சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி!

அத்தியாவசியப் பொருள்களை வாங்கிப்பத்திரப்படுத்தி வைக்குமாறு சீனாவின்வர்த்தக அமைச்சு விடுத்த அறிவித்தலைஅடுத்து தலைநகரில் மக்கள் விழுந்தடித்துக்கொண்டு பொருள்களை வாங்கிச்சேமித்து வருகின்றனர்.

குளிர் காலம் நெருங்குவதாலும் தொற்றுநோய்ப் பரவல் அதிகரிப்பதாலும் அத்தியாவசியப் பொருள்களது விநியோகம் குறிப்பாக மரக்கறி, இறைச்சி வழங்கல்கள் தடைப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் விநியோகங்கள் தடையின்றி நடப்பதை உறுதிப்படுத்துமாறு முகவர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்த வர்த்தக அமைச்சு, அத்தியாவசியப் பொருள்களைச் சேமித்து வைக்குமாறு நாட்டு மக்களுக்கும் ஆலோசனை தெரிவித்துள்ளது. அமைச்சு விடுத்த இந்த அறிவிப்பு வழமையான ஒன்றுதான்.அதனால் பதற்றப்பட்டுப் பொருள்களை வாங்கிச்செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனாலும் பெய்ஜிங் நகர மக்கள் சீனி, மா, அரிசி, எண்ணெய் போன்ற பலபொருள்களை வாங்கிச் சேமிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைச்சு விடுத்த அறிவுறுத்தல் சீனாவின் பிரபல சமூக ஊடகத் தளத்தில்(Weibo) வெவ்வேறு விதமாகப் பரப்பப்பட்டதால் மக்கள் மத்தியில் பதற்றம்உருவாக்கப்பட்டுள்ளதாக ‘சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்’ (South China Morning Post) பத்திரிகை தெரிவித்துள்ளது. தைவானுடன் போர் மூளவுள்ளதை அடுத்தே அரசு பொருள்களை வாங்கிப் பத்திரப்படுத்துமாறு கேட்கிறது என்றும் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன என்று அப்பத்திரிகை கூறுகிறது.

பெப்ரவரியில் குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. அதற்கு முன்பாக நாட்டில் இருந்து வைரஸைத் துடைத்து அகற்றி விடலாம் என்று சீனா போட்ட கணக்குப் பொய்த்துப் போய் விட்டது. டெல்ரா வைரஸின் புதிய வடிவங்கள் நாட்டின் பல மாகாணங்களிலும் வேகமாகப் பரவி வருகின்றன. குளிர் காலத்தில்தொற்றுக்கள் இன்னும் பெருகலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பொது முடக்கங்கள் வரலாம் என்று மக்கள் காத்திருக்கின்றனர்.

தொற்று ஏற்படும் பகுதிகளை எவரும்வெளியேறாத விதமாக மிக இறுக்கமாகமூடி முடக்கும் நடைமுறைகளைச் சீன அதிகாரிகள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷங்காய் நகரில் உள்ள டிஸ்னிலான்ட் கேளிக்கைப் பூங்காவில்(Shanghai Disneyland) தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பூங்கா இரு தினங்கள் முற்றாக மூடப்பட்டது.

குமாரதாஸன். பாரிஸ்.