இறைச்சிச் சாப்பாடு இனி இல்லை|நிறுத்துகிறது ஹெல்சிங்கி நகரம்.
கரியமிலவாயு வெளியேற்றலைக் குறைக்கும் தனது நடவடிக்கைகளில் ஒன்றாக இறைச்சியைத் தனது விருந்தினர்களுக்குப் பரிமாறுவதில்லை என்று முடிவுசெய்திருக்கிறது பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கி. நகரசபையால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் அந்தச் சமயத்தில் விளைவிக்கப்படும் உள்ளூர் காய்கறி உணவுகளையும் உள்ளூரில் பிடிக்கப்பட்ட மீன்களை மட்டுமே இனிமேல் பரிமாறவிருக்கிறது. பால் போன்ற விலங்குத் தயாரிப்புகளுக்குப் பதிலாக தானியத்தினால் செய்யப்பட்ட பால் வழங்கப்படும்.
நகரசபையின் முடிவானது ஒரு சாராரால் வரவேற்கப்பட்டாலும் அதை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். நாட்டின் உழவர்களைக் கொண்ட கட்சித் தலைவர் தான் இனிமேல் அந்த நகரால் ஒழுங்குசெய்யப்படும் நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதில்லை என்று அறிவித்திருக்கிறார். அத்துடன் நகரம் தனது முடிவிலிருந்து பின்வாங்காதவரை அந்த நகரின் முன்னேற்றத்துக்காகத் தான் எவ்வழியிலும் உதவமாட்டேன் என்கிறார் அவர்.
பின்லாந்தின் இறைச்சித் தயாரிப்பு காலநிலையில் பாதிப்புக்களை ஏற்படுத்தாமல், முடிந்தவரை விலங்கினங்களுக்கு நல்ல வாழ்வைக் கொடுத்தே தயாரிக்கப்படுகின்றன. அவைகளையும் அந்த நகரம் விலக்குவது வருத்தத்துக்குரியது என்கிறார்கள் நாட்டின் விலங்குணவுத் தயாரிப்பாளர்கள்.
அதேசமயம் ஹெல்சிங்கி நகரம் சில விதிவிலக்குகளையும் செய்யத் தயாராக இருப்பதாகச் சொல்கிறது. உலகின் அதிமுக்கிய பிரதிநிதிகள் நகருக்கு வரும்போது அவர்களுக்காக சில சமயத்தில் இறைச்சி உணவைப் பரிமாறத் தயார் என்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்