காலநிலை மாற்றத்துக்கு தடைக்கல் வைக்க ஒன்றுசேரப்போகும் சீனாவும், அமெரிக்காவும்.
கிளாஸ்கோவில் நடந்துகொண்டிருக்கும் காலநிலை மாநாட்டின் ஆரம்ப நாளிலிருந்து ஒருவரையொருவர் தாக்கி “அவர்கள் தேவையான அளவு எதையும் செய்யவில்லை,” என்று குறைகூறிக்கொண்டிருந்த சீனாவும், அமெரிக்காவும் தாம் காலநிலை மாற்றங்களை எதிர்நோக்க ஒன்றிணைந்து செயற்படப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். உலகின் சூழலை மாசுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளில் முதலிரண்டு இடங்களையும் பெறும் அந்த நாடுகளிரண்டும் இவ்வறிவிப்பை வெளியிட்டது உலகை மகிழ்வுடன் அதிர்ச்சியடையவைத்திருக்கின்றது.
பாரிஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட குறிக்கோளான உலகின் வெம்மை 1.5 பாகைக்கு மேல் அதிகரிக்காமலிருக்கும் நடவடிக்கைகளைத் தாம் ஒன்றுசேர்ந்து எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் சீனாவும், அமெரிக்காவும். நிலக்கரிப் பாவிப்பை நிறுத்துதல், காடுகளை அழிப்பதை நிறுத்துதல் ஆகியவைகளிலும் தாம் ஒன்றிணைந்து முடிவுகள் எடுக்கப்போவதாக இரண்டு நாடுகளும் குறிப்பிட்டிருக்கின்றன.
காலநிலை மாற்றம் பற்றிய விடயங்களுக்கான இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளும் புதனன்று கிளாஸ்கோவில் தமது அறிவிப்பை வெளியிட்டார்கள். தாமிருவரும் சேர்ந்து 2035 ம் ஆண்டு அடையவேண்டிய காலநிலை மாற்றக் குறிக்கோள்களை விரைவில் வெளியிடவிருப்பதாக அவ்விருவரும் தெரிவித்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்