காடுகளை அழிப்பதற்கு அடிகோலியாக இருக்கும் பண்டங்களை இறக்குமதி செய்வதைத் தடைசெய்ய முயலும் ஐரோப்பிய ஒன்றியம்.
காடுகளை அழித்து அதன் மூலமாகத் தயாரிக்கப்படும் இறைச்சி, சோயா, பாமாயில், கோப்பி, கொக்கோ போன்ற பண்டங்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்யும் சட்டத்தைப் போடத் திட்டமிடுகிறது ஐரோப்பிய ஒன்றியம். அச்சட்டம் அமுலுக்கு வருமானால் விளைவை ஐரோப்பாவில் மட்டுமன்றி உலகெங்கும் வாழும் கொள்வனவாளர்கள் அதை உணருவார்கள் என்று கணிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட பொருட்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அவை காடழிப்புக்கு அடிகோலியாகவோ, கரியமிலவாயு வெளியேற்றத்தை அதிகரிப்பவையாகவோ இருக்கவில்லை என்பதை நிரூபிக்கவேண்டும் என்கிறது ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் சட்ட மசோதா.
இதன் விளைவாக குறிப்பிட்ட பொருட்களின் விலைகள் உயருமா என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார்கள் அந்த மசோதாவை முன்னெடுத்துச் செல்லும் அரசியல்வாதிகள். அப்படியான பக்கவிளைவு ஏற்படினும் தற்போதைய நிலையில் விலையுயர்வைத் தடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்கிறார்கள் அவர்கள். உலகின் பல பாகங்களில் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றத்துக்குத் தடை போட இப்படியான பல நடவடிக்கைகள் எடுக்கவேண்டிவரும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே என்கிறார்கள் அவர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்