தமது “ஆதரவு நாடுகளின்” எல்லைகளையடுத்து இராணுவத் தசைநார்களை முறுக்கும் மேற்கு நாடுகளுக்குப் புத்தின் எச்சரிக்கை!
கருங்கடலில் மேற்கு நாடுகளின் கடற்படை, இராணுவத்தின் பயிற்சி, ரஷ்யாவின் பகுதியாக்கப்பட்ட கிரிம் தீபகற்பத்தை அடுத்த பகுதிகளின் அரசியலில் மேற்கு நாடுகள் மூக்கை நுழைத்தல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி “உக்ரேன் சம்பந்தப்பட்ட அரசியல் பிரச்சினை முடிந்துவிட்டது என்று கற்பனை செய்யாதீர்கள்,” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி.
அதேசமயம் உக்ரேனின் எல்லைக்கு அடுத்த பகுதிகளில் ரஷ்யா தனது இராணுவத்தைச் சமீப காலத்தில் குவித்து வருவது அனாவசியமானது என்று அமெரிக்கா ரஷ்யாவுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இரண்டு பகுதினரின் சமீபகால நடவடிக்கைகளும் உக்ரேன், பெலாரூஸ் நாடுகளைச் சுற்றியுள்ள பிராந்தியத்தின் அதிகாரம் யாரிடமிருக்கிறது? என்பதில் பலம்பார்ப்பதாக இருந்து வருகின்றன.
பெலாரூஸ் மூலமாகப் போலந்துக்குள் நுழையச் சமீபகாலத்தில் அங்கே குவிந்திருக்கும் அகதிகளின் நிலைமையை மேற்கு நாடுகள் பெலாரூஸுக்கு எதிராகத் திருப்பிவிடுவதாகப் புத்தின் குற்றஞ்சாட்டுகிறார்.
“பெலாரூஸ் – ரஷ்யா ஆகிய நாடுகள் ஒன்றுடனொன்று இணைந்திருக்கின்றன. மேற்கு நாடுகள் தமது மனிதாபிமானத்தை அகதிகள் மீது காட்டவேண்டும்,” என்கிறார் புத்தின்.
மேற்கு ஆசிய நாடுகளில் ஸ்திர நிலைமையை உண்டாக்குவது ரஷ்யாவின் கடமை என்பதே புத்தினின் கருத்து. அதனால் அந்த நாடுகளுடன் ரஷ்யா ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்களின்படி அவர்களுக்கு ரஷ்யா உதவுவதை மேற்கு நாடுகள் கண்டுகொள்ளலாகாது. அந்த ஒப்பந்தங்களுக்கான நிலைமையாக புத்தின் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் நிலையற்ற அரசியலைச் சுட்டிக் காட்டுகிறார்.
மேற்கு நாடுகள் ரஷ்யா மீது போட்டிருக்கும் பல கட்டுப்பாடுகளையும் கடுமையாகக் கண்டிக்கிறார் புத்தின். தமது முக்கிய வர்த்தக உறவாக இருக்கும் மேற்கு நாடுகள் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளைப் போட்டுவிட்டு, நாட்டோவின் இராணுவப் பயிற்சிகளை ரஷ்யாவின் கொல்லைப்புறத்தில் செய்துவருவதன் மூலம் நல்லுறவை எதிர்பார்க்கலாகாது என்பது அவரது கருத்தாக இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்