ஹமாஸ் இயக்கத்தை பிரிட்டனும் அடுத்த வாரம் முதல் தீவிரவாத இயக்கமாகப் பிரகடனம் செய்யலாம்.

அமெரிக்காவில் தற்சமயம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கும் ஐக்கிய ராச்சியத்தின் உள்ளூராட்சி அமைச்சர் பிரீதி பட்டேல் பாலஸ்தீனர்களின் விடுதலை இயக்கம் என்று குறிப்பிடப்படும் ஹமாஸ் அமைப்பைச் சட்டரீதியாகத் தீவிரவாத இயக்கம் என்று பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்தலாம் என்று தெரியவருகிறது. பிரிட்டனின் அந்தத் திட்டத்தை பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் ஆட்சியிலிருக்கும் ஹமாஸ் கடுமையாகக் கண்டிக்கிறது.

ஐக்கிய ராச்சியத்தில் அந்த இயக்கம் தீவிரவாத இயக்கமாகப் பிரகடனப்படுத்தப்படும் பட்சத்தில் அதை ஆதரிக்கும் செயல்களில் ஈடுபடுகிறவர்களை 14 வருடங்கள் வரை சிறைக்குள் போடலாம். ஹமாஸ் அமைப்பு ஏற்கனவே அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தீவிரவாத அமைப்பு என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

“ஹமாஸ் இயக்கத்தின் இராணுவ, அரசியல் பிரிவுகளை அடையாளப்படுத்துதல் முடியாத காரியம். அவர்கள் முழுக்க முழுக்க யூத எதிர்ப்பாளர்கள்,” என்று குறிப்பிடும் பிரீதி பட்டேல் தனது முடிவுக்குப் பின்னணியில் ஆழமான ஆராய்ச்சியும், இரகசியக் கண்காணிப்புக்களும் இருக்கிறது என்று தெரிவித்தார். நீண்ட காலமாகவே இஸ்ராயேல் பக்கம் சாயும் அரசியல்வாதியாகவே இருந்துவரும் பட்டேல் 2017 இல் இஸ்ராயேலுக்குச் சுற்றுலா சென்றபோது தனது அரசின் அனுமதியின்றி அன்றைய பிரதமரான நத்தான்யாஹுவைச் சந்தித்தது வெளியே தெரியவந்ததால் தனது பதவியை விட்டு விலகவேண்டியதாயிற்று. அச்சமயத்தில் அவர் ஐக்கிய ராச்சியத்தின் சர்வதேசத் தொடர்பு அபிவிருத்திக் காரியதரிசியாக இருந்தார்.

இஸ்ராயேல் அரசு பிரீதி பட்டேலின் முடிவைக் கைதட்டி வரவேற்றிருக்கிறது. வெளிவிவகார அமைச்சர் யாய்ர் லப்பிட், “அந்த முடிவு பிரிட்டனுடன் எங்கள் தொடர்புகளை மேலும் இறுக்கமாக்கிக்கொள்ள உதவும்,” என்று குறிப்பிட்டார். 

சாள்ஸ் ஜெ. போமன்