“பெண்கள் பங்குபற்றும் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகளில் காட்டவேண்டாம்,” தலிபான் கலாச்சார அமைச்சு.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்துவரும் தலிபான்களின் அரசு “மத ஒழுக்கங்கள், பாரம்பரியங்கள் பேணும் வழிகாட்டுதல்களை” வெளியிட்டிருக்கிறது. அவைகளைப் பின்பற்றுவது கட்டாயமில்லை என்றும் அவை நாட்டின் பாரம்பரியத்தையும், ஒழுக்கத்தையும், மதக்கோட்பாடுகளையும் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்களே என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அவைகளில் ஒன்றாக தொலைக்காட்சி நிலையங்கள் தமது நிகழ்ச்சிகளில் பெண்கள் கதாபாத்திரங்களாக இருக்காதபடி பார்த்துக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தலிபான்களின் தலைமை சில மாதங்களுக்கு முதல் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, தாம் முன்னர்போல “கடுமையான மத ஒழுங்குச் சட்டங்களைக் கொண்டுவரப்போவதில்லை,” என்று பல தடவைகள் உறுதிகூறியதையும் மீறி இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
“இஸ்லாமிய, ஆப்கானியக் கலாச்சாரத்துக்கு ஒவ்வாத நிகழ்ச்சிகள் தடைசெய்யப்படவேண்டும், தொலைக்கட்சியில் அறிவிக்கும் பெண்கள் ஹிஜாப் அணிந்திருக்கவேண்டும், நிகழ்ச்சிகளில் காட்டப்படும் ஆண்களின் உடற்பகுதிகள் எதுவும் உடையில்லாமலிருக்கலாகாது, முஹம்மது நபியையோ மற்றைய மதிப்புக்குரிய நபர்களையோ உருவகப்படுத்தும் நிகழ்ச்சிகள் காட்டலாகாது,” என்பவை வெளியாகியிருக்கும் “வழிகாட்டுதல்களில்” சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்