பொதுத்தேர்தலுக்கு லிபியாவில் ஒரு மாதமிருக்கிறது ஆனால், நாட்டுக்கு அரசியலமைப்புச் சட்டமே இதுவரை இல்லை.

டிசம்பர் 24 ம் திகதி லிபியாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி ஆகியோரைத் தெரிவுசெய்யும் தேர்தல் நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தேர்தலைக் குழப்புவதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு முயற்சிகள் மிகவும் உக்கிரமாக நடந்துவருவதாக நாட்டின் ஜனநாயக அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

நடக்கவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளர்களாக எப்படிப்பட்டவர்களைத் தெரிவுசெய்வது, எந்த அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாட்டை ஆள்வது, தேர்தல்களை நடத்துவதற்கான வரையறைகள் என்ன என்பது பற்றி இதுவரை லிபியாவில் தெளிவான முடிவு இல்லை. பலவிதமான நோக்கங்களைக் கொண்டவர்களும் லிபியாவின் அரசியலுக்குள் கணிசமான அளவில் மூக்கை நுழைத்திருப்பதால் ஒரு ஜனநாயக நாட்டை ஆளத் தேவையான அத்திவாரங்கள் எதுவுமே கட்டமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்க அங்கே தேர்தல் நடப்பதே சந்தேகத்துக்கு இடமானது என்றே பலரும் கருதுகிறார்கள்.

சர்வாதிகாரி கடாபியின் ஆட்சி வீழ்ந்தபின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் பலவிதமான சக்திகள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் காலூன்றியிருக்கின்றன. நாடு கிழக்கு – மேற்கு என்று இரண்டாகப் பிரிந்து வெவ்வேறு சக்திகளால் ஆளப்படுகின்றன. அவ்வப் பிராந்தியங்களின் வெவ்வேறு பாகங்களில் அவர்களின் கையைப் பலப்படுத்தும் ஆயுதக் குழுக்கள் தமது அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா, பிரான்ஸ், எகிப்து, துருக்கி, கத்தார், எமிரேட்ஸ், இத்தாலி, ரஷ்யா ஆகிய நாடுகளின் ஆதரவும் வெவ்வேறு லிபிய ஆயுதக்குழுக்களுக்கு ஆதரவளிக்கின்றன. தவிர, இஸ்லாமியக் காலிபாத் அமைக்கப் போராடும் வெவ்வேறு ஜிகாதிக் குழுக்களும் தமக்குள் மோதிக்கொள்கின்றன. லிபியாவில் காலூன்றியிருக்கும் ஆயுதபாணிக் குழுக்கள் சுற்றிவர இருக்கும் வட ஆபிரிக்க நாடுகளிலும் தங்கள் மூக்கை நுழைத்து வருகிறார்கள்.

ஸெய்ப் அல் இஸ்லாம் கடாபி என்ற கடாபியின் சர்வாதிகார ஆட்சியின் கொடுமைகளுக்குத் துணைபோன மகன் திடீரென்று அரசியல் அரங்கில் தோன்றி, தான் ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்பதாக அறிவித்திருக்கிறார். மனித குலத்துக்கெதிரான குற்றங்களுக்காகச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டுவரும் ஸெய்ப் அல் இஸ்லாம் சில ஆயுதக் குழுக்களுடன் கூட்டுச்சேர்ந்திருப்பதால் இதுவரை நீதியின் முன்னர் நிறுத்தப்படவில்லை.

கலீபா கப்தார் என்ற முன்னாள் கடாபியின் இராணுவத் தளபதியும் ஜனாதிபதியாகத் துடிக்கும் இன்னொரு நபராகும். அமெரிக்காவுக்கு ஓடி அங்கே 20 வருடங்கள் வாழ்ந்து அமெரிக்காவின் உளவுத்துறையுடன் ஒத்துழைத்த கலீபா கப்தாரும் லிபியாவில் இழைத்த மனித குலத்துக்கெதிரான குற்றங்களுக்காக நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேண்டியவர் என்று குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்