தனியார்களின் டிஜிடல் நாணயங்களைத் தடைசெய்யும் சட்டத்தைக் கொண்டுவரவிருக்கிறது இந்தியா.
இவ்வருட ஆரம்பத்தில் எச்சரித்தபடி இந்தியாவின் அரசு தனியார்களால் வெளியிடப்படும் டிஜிடல் நாணயங்களைத் (cryptocurrency) தடைசெய்யும் சட்டத் திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டுவரவிருக்கிறது. அதேசமயம், இந்தியாவின் மத்திய வங்கி டிசம்பர் மாதத்தில் தனது இயக்கத்தில் செயற்படும் டிஜிடல் நாணயத்தைக் கொண்டுவரவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
பிட்கொய்ன் போன்ற டிஜிடல் நாணயங்களின் வரவும், அவையின் பரவலும் உலகின் பல நாடுகளையும் அவைகளை எப்படிக் கையாள்வது என்ற கேள்வியைக் கட்டாயமாக்கியிருக்கின்றன. சர்வதேச ரீதியில் இணையத்தளங்கள் எல்லையேதுமின்றிப் பரவியிருவருவதால் டிஜிடல் நாணயங்களைக் கட்டுப்படுத்துவது இலகுவான காரியமல்ல. உலகின் ஒரேயொரு நாடாக எல் சல்வடோர் மட்டுமே இதுவரை அதைத் தனது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட நாணயமாக்கியிருப்பதுடன், அதைத் தனது நாட்டின் பொருளாதாரத்துடன் இணைக்கவும் செய்திருக்கிறது.
இந்தியாவின் நிலைப்பாடு சில வருடங்களாகவே டிஜிடல் நாணயங்களைத் தடைசெய்வது என்ற திசையிலேயே போய்க்கொண்டிருக்கிறது. அதற்கான முக்கிய காரணங்களாக அது கறுப்புச் சந்தையைக் கண்டுகொள்வதைத் தடுக்கும், சர்வதேச ரீதியான குற்றவாளிகளை அடையாளங்காண்பதற்கு இடையூறாக இருக்கும், தீவிரவாதிகள் இலகுவாக இயங்க உதவும் போன்றவை சுட்டிக் காட்டப்படுகின்றன. அத்துடன் டிஜிடல் நாணயங்களுக்கு வரி விதிப்பதும் மிகச் சிக்கலான விடயமாகும்.
உலகின் பல நாடுகளைப் போலவே இந்தியாவும் தனது பங்குக்கு மத்திய வங்கி மூலம் டிஜிடல் நாணயங்களை அறிமுகம் செய்வதை தனியார் நாணயங்களின் ஊடுருவலைத் தடுப்பதற்காக அறிமுகம் செய்யவிருக்கின்றது என்பது புதிய செய்தியாகும்.
இந்தியாவின் சமீப வருடங்களில் டிஜிடல் நாணயக் கொள்வனவு 600 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. 15 முதல் 100 மில்லியன் பேர் ஏற்கனவே தனியார் டிஜிடல் நாணயங்களைத் தங்களுடைய சொத்துக்களில் வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் கொண்டுவரப்படவிருக்கும் சட்டம் தனியார் டிஜிடல் நாணயங்களை வைத்திருப்பதும், அவைகளின் மூலம் கொள்வனவு, செலவு செய்வது சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்மானிக்கவிருக்கிறது. ஏற்கனவே அவைகளை வைத்திருப்பவர்களை அச்சட்டம் எப்படிக் கையாளப்போகிறதென்று இதுவரை தெரியவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்