சித்திரவதை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் இண்டர்போல் அமைப்பின் தலைமைக்குத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.

அஹ்மத் நஸர் அல்-ரைஸி என்ற எமிரேட்டைச் சேர்ந்த தளபதி வரவிருக்கும் நாலு வருடங்களுக்குச் சர்வதேசப் பொலீஸ் அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அலங்கரிப்புப் பதவியான இண்டர்போல் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் அவர் இதுவரை எமிரேட்ஸ் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக இருந்தவராகும்.

அஹ்மத் நஸர் அல்-ரைஸி மீது சித்திரவதைகளில் ஈடுபட்டதாகப் பிரான்ஸிலும், துருக்கியிலும் குற்றஞ்சாட்டி வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. அபுதாபியில் இண்டர்போலின் விபரங்களை வைத்து அரசியல் விமர்சகர்களைத் தண்டித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அதையடுத்து எமிரேட்ஸ் அரசு இண்டர்போல் அமைப்புக்கு மிகப்பெரும் தொகையொன்றை “நன்கொடையாகக்” கொடுத்தபின்னரே மேற்கண்ட நியமனம் செய்யப்பட்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள். மனித உரிமை அமைப்புக்களும் இந்த நியமனத்தைப் பற்றி விமர்சிக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்