எதிரிகளை விரும்புகிறேன் ❤

என்
பிறப்பின் வலிமை
பலருக்குத் தெரியாது…

என்
இயக்கத்தின் மூலம்
எதுவென்றே
தெரியாது…

நான்
விதைத்த விதைகளின்
இடம் தெரியாது….

நான்
வளர்த்து வைத்துள்ள
உச்சங்களின்
முகம் தெரியாது…

நான்
எதிர்நின்று
போராடிய
களம் தெரியாது…

என்னுடைய
சுயத்தை
சுமந்து கொண்டிருக்கும்
நூல்களின்
எண்ணிக்கை தெரியாது…

என்
பயணத்தை
நீட்டித்துக் கொண்டிருக்கும்
பின்புலம் தெரியாது…

நான் செய்த
அரசியலின்
அரிச்சுவடி
தெரியாது…

நான்
சந்தித்த
போராட்டங்களின்
வடிவம் தெரியாது…

நான்
எதிர்கொண்ட
வலிமைகளின்
சக்தி தெரியாது…

என்னுடைய
மேடைகளில்
உண்டான
எழுச்சி தெரியாது…

என்னை
அரவணைத்துள்ள
கேடயங்களின்
பலம் தெரியாது…

நான்
கடந்துவந்த
பாதையின்
வலிகள் தெரியாது…

எங்கே..
எதனால்…
எப்படி என்று…
என்னை
ஆய்வு செய்ய
என் சுயம் தெரியாது…

நான்
விபத்துகளில்
தப்பி வந்தவனல்ல..
வியூகங்களை
உடைத்து வந்தவன்…
சுற்றுகள் போட்டவரிடம்
சிதைந்தவன் அல்ல
திமிறி வந்தவன்…

என்
பெயரைக்கேட்டாலே
சில பதர்களுக்கு
எடுக்கும் உதறல்…
அதனால்
அவற்றிடமிருத்து வரும் உளறல்…

நான்
அரித்து அரித்து
அழித்துவிட
பழைய புத்தகமல்ல..
காலத்தால் கரையாத
கல்வெட்டு!

இந்த
மண்ணில்
மொழியிருக்கும்
வரையில்
என் படைப்பிருக்கும்…
மனிதமிருக்கும்
வரையில்
என் பெயர் இருக்கும்!

என்னுடைய
ஒரு பக்கத்தை மட்டுமே
பார்த்துக்கொண்டு
ஒரு முடிவிற்கு
வந்துவிடாதீர்கள்!

நான்
அதிகம் விரும்புவதே
தன் பலத்தை
எனக்களிக்கும்
என்
எதிரிகளைத்தான்!

எழுதுவது பாரதிசுகுமாரன்