தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளாத வாழ்வும் ஒரு வாழ்வா, என்றுணரவைக்கப் போகும் இத்தாலி.
இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமான ”super green pass” என்ற விசேட அடையாள அட்டையை டிசம்பர் 6 ம் தேதிமுதல் புழக்கத்துக்குக் கொண்டுவரப்போகிறது இத்தாலி. அந்த அனுமதி அட்டையுள்ளவர்கள் மட்டுமே கொரோனாப் பரவலுக்கு முன்னர் போல தமது வாழ்வை இயல்பாக வாழலாம்.
நாட்டில் மீண்டுமொருமுறை தொற்றால் பெருமளவில் மக்கள் மடியாமல், பொருளாதாரம் பாதிக்கப்படாமலிருக்க இத்தாலி தடுப்பூசி போடாதவர்கள் மீது தனது பிடியை மேலும் இறுக்குகிறது. ஒக்டோபர் மாதம் முதலே இத்தாலி தான் ஐரோப்பாவிலேயே கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளைக் கொண்ட சமூகமாகியிருக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே சமூகத்தின் பெரும்பாலான சேவைகளுக்கான கதவுகள் திறந்திருக்கின்றன. தடுப்பூசி பெறாதவர்கள் 48 மணித்தியாலத்துக்கு முன்னர் தன்னைத் தொற்றுப் பரிசீலனை செய்தால்தான் தத்தம் வேலைக்கே போகமுடியும்.
கடந்த வருடம் இத்தாலியின் சுற்றுலாத்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டது. பனிக்காலச் சுற்றுலா தலங்கள், நத்தார் கொண்டாட்டங்கள் ஆகியவையில் பாதிப்பு ஏற்படாதிருக்க நாட்டில் தொற்றுப்பரவல் மீண்டும் பெருமளவில் தலையெடுக்க அனுமதிக்கப்போவதில்லை என்று அரசு சுட்டிக் காட்டுகிறது. அத்துடன் முன்னர் போல பொது முடக்கங்கள் கொண்டுவந்து இயல்பு வாழ்வுக்கு இடைஞ்சல் செய்யப்போவதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது.
இயல்பு வாழ்வைத் தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே அனுபவிக்கலாம். டிசம்பர் 6ம் திகதி முதல் தமது உத்தியோகத்துக்குப் போக மட்டுமே தடுப்பூசி போடாதவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுடைய வாழ்வு வீடு – வேலை – வீடு என்ற வட்டத்துக்குள்ளேயே அமையலாம் என்கிறது அரசு. தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள் போல உணவகங்கள், விளையாடுப் போட்டிகள், களியாட்டங்களுக்குப் போக தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதியில்லை.
12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 84 % இத்தாலியில் தமது இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளார்கள். நாட்டின் பிராந்திய அதிகாரங்களே தத்தம் பகுதிப் பொருளாதாரங்கள், சமூக சேவைகள் பாதிக்கப்படாமலிருக்க அரசிடம் புதிய ”super green pass” திட்டத்தைக் கொண்டுவரும்படி நிர்ப்பந்தம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
டிசம்பர் 15 ம் திகதி முதல் மக்கள் ஆரோக்கிய சேவைகளில் ஈடுபட்டிருப்போருக்கு மூன்றாவது தடுப்பூசியும் கட்டாயமாக்கப்படும்.
அரசின் கடுமையான கொவிட் 19 கட்டுப்பாடுகளை எதிர்க்கும் இயக்கத்தினர் இத்தாலியில் அதிகமில்லை என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், தடுப்பூசி எடுக்க மறுத்து அரசை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறு பங்கினர் கடுமையான எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். புதிய நடவடிக்கைகள் அவர்களை மேலும் அதிக வன்முறையில் ஈடுபடத் தூண்டலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்