“ஒமெக்ரோன்” தொற்றியவர்கள் மற்றைய ரகங்கள் தொற்றியவர்களை விட இலேசான சுகவீனங்களையே பெறுகிறார்கள், என்கிறார் அத்திரிபை அடையாளங் கண்டவர்.
‘உலக நாடுகளெல்லாம் திகில் பிடித்து பதறிக்கொண்டிருக்கும் ஒமெக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றைய கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களை விட மெலிதான சுகவீனங்களையே பெற்றார்கள்,” என்கிறார் அந்தத் திரிபை முதன் முதலில் அடையாளங் கண்டு வெளிப்படுத்திய மருத்துவர் அஞ்சலிக் கோர்ட்சே. அவரே தன்னிடம் வந்த கொவிட் 19 நோயாளிகள் சிலருக்கு வித்தியாசமான சுகவீனங்கள் இருக்கக்கண்டு உடனடியாக அதைச் சுட்டிக்காட்டி எச்சரித்தவராகும்.
தசைநார்களில் நோவு, கடுமையான சோர்வு ஆனால் சுவைகாணல், மணம் உணர்தல் போன்றவற்றில் எவ்வித பாதிப்புமின்மை, ஆகிய சுகவீனங்களால் தன்னிடம் வந்த இளவயதினரையும், ஒரு ஆறு வயதுச் சிறுவனையும் அஞ்சலிக் கோர்ட்சே கவனித்தார். அவர்களுக்குக் கொவிட் 19 தொற்றியிருப்பினும் மற்றைய கொவிட் நோயாளிகளைப் போலில்தாதது கண்டு அவர் மற்றைய மருத்துவர்களைத் தொடர்புகொண்டார். தெனாபிரிக்காவில் அதன் மூலம்தான் ஓமிக்ரோன் வரை திரிபு முதலில் அடையாளங் காணப்பட்டது.
“இந்தச் சுகவீனங்கள் மற்றைய கொவிட் 19 நோயாளிகளை விட மிகவும் மென்மையானவையே,” என்று குறிப்பிடும் கோர்ட்சே, ” இந்த ஆராய்வு தற்போது ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறது. அதனால் எல்லோரும் மிகவும் பதட்டப்படுகிறார்கள். ஒருவேளை இது இலகுவாகத் தொற்றும் மெல்லிய சுகவீனமாகக்கூட இருக்கலாம். ஆனாலும், நாம் இப்போதைக்கு எதையும் தெளிவாகச் சொல்லமுடியாது, தொடர்ந்து அவதானிக்க வேண்டும்,” என்று தனது கருத்தை “டெலிகிராப்” பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.
33 வருடங்கள் மருத்துவராக இருக்கும் கோர்ட்சே மொத்தம் 20 ஒமிக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கையாண்டிருக்கிறார். அவர்கள் பெரும்பாலும் நல்ல ஆரோக்கியமுள்ள ஆண்கள். ஓரிருவருக்கு மெல்லிய இருமலும் இருந்தது என்கிறார் அவர்.
ஆபிரிக்க நாடுகளில் மிக அதிகமாகக் கொவிட் 19 ஆல் இறந்தவர்களுள்ள தென்னாபிரிக்காவில்தான் அக்கண்டத்தின் அதிகமாகத் தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்கிறது. ஆனால், ஐரோப்பா, அமெரிக்காவோடு ஒப்பிடும்போது மிகக்குறைவு. சுமார் 38 விகிதமான குடிமக்களே தடுப்பூசிகளைப் பெற்றிருக்கிறார்கள்.
சர்வதேச ரீதியில் தமது நாடுகளுடன் கடுமையான தடைகளைப் போட்டிருப்பதைத் தென்னாபிரிக்கா கண்டித்திருக்கிறது. புதிய வகைத் திரிபைப் பற்றித் தெளிவான விபரங்களெதுவும் தெரியாத நிலையில் அப்படியான கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது தமது பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துவருவதைத் தென்னாபிரிக்கா விரும்பவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்