“ஒமெக்ரோன் அதீதமான உலகளாவிய ஆபத்து, தயாராகுங்கள்,” என்றது உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு!
கடந்த இரண்டு நாட்களாக உலக நாடுகளைக் கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கும் ஒமெக்ரோன் திரிபு அதீதமான ஆபத்தை விளைவிக்கக்கூடியது, என்று உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு தனது அங்கத்துவர்களான 194 நாடுகளையும் எச்சரித்திருக்கிறது. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளுக்காகத் தயாராகும்படி உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
தடுப்பூசி போடலை வேகப்படுத்தல், தொற்றுள்ளவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தல், கொவிட் 19 மருத்துவ சேவைகளுக்கான ஏற்பாடுகளைத் தயார் செய்தல் போன்றவைகளில் நாடுகள் உடனடியாகக் கவனம் செலுத்தவேண்டும் என்றும் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு அறைகூவியிருக்கிறது.
இஸ்ராயேல், ஜப்பான், மொரொக்கோ ஆகிய நாடுகள் ஏற்கனவே சகல நாட்டவர்களுக்கும் தமது எல்லைகளை மூடிவிட்டன. ஐக்கிய ராச்சியம், பிரேசில், தென்னாபிரிக்கா உட்பட்ட சுமார் ஒரு டசின் நாடுகளிலிருந்து வருபவர்களுக்குக் கட்டாயப் பரிசோதனையை இந்தியா எல்லைகளில் ஏற்பாடு செய்கிறது.
டென்மார்க், கனடா, ஆஸ்ரேலியா, ஐக்கிய ராச்சியம், பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ், செக் குடியரசு, ஜேர்மனி ஆகிய நாடுகளில் ஏற்கனவே ஒமெக்ரோன் தொற்றுள்ளவர்கள் காணப்பட்டிருக்கிறார்கள். போர்த்துகாலில் உதைபந்தாட்டக்குழு ஒன்றைச் சேர்ந்த 13 பேருக்கு அத்திரிபு காணப்பட்டது.
உலகின் பெரிய பொருளாதாரங்களின் ஜி 7 நாடுகள் இன்று ஒமெக்ரோன் திரிபுத் தொற்றலை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி ஆலோசிக்க இன்று அவசர கூட்டமொன்றைக் கூட்டவிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்