ஆப்கானிய எமிராட்டில் நடக்கவிருக்கும் சர்வதேச இஸ்லாம் நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு.
ஆப்கானிஸ்தானின் மோசமான நிலைமையை உலகின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக முஸ்லீம் நாடுகளின் கூட்டுறவு அமைப்பின் [Organisation of Islamic Cooperation] மாநாட்டை அங்கே நடத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகப் பாகிஸ்தான் தெரிவித்தது. தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்னர் அங்கே நடக்கவிருக்கும் சர்வதேச நிகழ்வு அந்த மாநாடாக இருக்கும் என்று பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி குறிப்பிட்டார்.
57 நாடுகளைக் கொண்ட அந்தக் கூட்டமைப்பின் தலைமை தற்போது சவூதி அரேபியாவிடம் இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் அந்த மாநாட்டைக் கூட்டுவது பற்றியும் அதன் மூலம் அந்த நாட்டில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பசி, பட்டினியை உலகுக்குக் காட்டி உதவி கோருவதையும் பற்றி சவூதி அரேபியாவே பாகிஸ்தானிடம் கேட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
கடந்த தடவை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை நடத்தியபோது அவர்களுடன் நெருங்கிய நட்பு நாடாக இருந்துவந்த சவூதி அரேபியா அதன் பக்க விளைவுகளால் தனது நாட்டில் ஏற்பட்ட தீவிரவாத மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனவே, அவர்கள் சமீபத்தில் மீண்டும் தலிபான்கள் ஆப்கானில் ஆட்சியமைத்தபின் ஒதுங்கியே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்