பாலஜோதி எழுதிய சுழியம் நாவல்| விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை

நூலைப் பார்த்தவுடனேயே வாசிக்கத்தூண்டும் விதமாக அமையப்பெற்றது இந்த சுழியம் நாவல். சுழியம் நூலின் பின் அட்டையில் குறிக்கப்பட்டிருந்த ‘சில பரிசோதனை முயற்சிகளைத் துணிச்சலாக ஆசிரியர் மேற்கொண்டு இருக்கிறார்’ என்பன போன்ற வாசகங்கள் தான் உடனடியாக படிக்கத் தூண்டிய விடயங்களாகும். நாவலைப் படித்து முடித்தவுடன் நீர்மமான வெற்றிடம் மனதுக்குள் மண்டியது உண்மை தான். கதையின் ஆரம்பம் தொடங்கி கடைசி அத்தியாயம் படித்து முடிக்கிறவரை கொஞ்சம்கூட விறுவிறுப்பு குறையாமல் சென்று இதயத்தை கணமாக்கி முறுக்கி பிழிந்து ஒரு மாயசக்திக்கு கட்டுப்பட்டதுபோல மனம் லயித்திருந்தது.

வணிக வளாகத்தினுள் ஒரு கடையில் இருக்கக்கூடிய பயோடிக் தயாரிப்பான பயோடிக்மேன், பயோடிக்வுமன் இவைகளை வைத்து சில சுவையான கற்பனை சம்பவங்களைப் பிணைத்து கதை முழுக்க நகர்த்தப்பட்டிருப்பது புதிய முயற்சி.

நிச்சயம் இலக்கியவெளியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

அந்த பயோடிக் மனிதனையோ, பயோடிக் மனுஷியையோ எடுத்துச் செல்லப்படுபவர்களுக்கு இருபத்திநான்கு மணி நேரத்திற்குள்ளாக பேயை காட்டிவிடும். அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக பேயைக் காட்டவில்லையென்றால் இரட்டைதனையானத் தொகையை வாடிக்கையாளரிடம் கொடுத்து விடவேண்டும் என்பது பந்தயம்.

இங்கு எழிலன் அழைத்துச் சென்ற பயோடிக்வுமன் “பேயை காண்பித்ததா…? “என்றால் இல்லை. குறிப்பிட்டபடி அது பேயைக் காட்டவில்லையென்பதினாலும், அதற்கு ஏற்றப்பட்டிருந்த சார்ஜர் குறைந்துவிட்டிருந்ததினாலும் அதனை ஒப்படைத்து, திரும்பப் பெறவேண்டிய இரட்டிப்புத் தொகையைப் பெறுவதற்காக விரைந்து வந்துகொண்டிருக்கிறான் எழிலன்.

பயோடிக் வணிக கடைக்காரனின் சாமர்த்தியம் என்னவென்றால், பெண்ணாகயிருந்தால் ஆண் பயோடிக் மனிதனை இட்டுச் செல்லுமாறும், ஆணாகயிருந்தால் பெண் பயோடிக் மனுஷியை இட்டுச் செல்லுமாறும் அவர்களின் மனங்களை மடைமாற்றுவது தொழில் ரகசியமாக காக்கப்பட்டது. அப்படி எடுத்து வரப்பட்ட ஒரு பயோடிக் மனுஷியை கொண்டுபோய் மீண்டும் கடையில் ஒப்படைக்கிற கிட்டத்தட்ட பதினாறு அத்தியாயங்கள் வரை ஒரு சிறுகதையின் தோற்ற விரிவாக்கமாய் கதை நகர்த்தப்படுகிறது.


இதற்கு இடையில், படித்தது, படித்தவர்களுடனான பழக்கவழக்கங்கள், அவர்களுடனான சந்திப்பு, அவன் இப்பொழுது செய்துகொண்டிருக்கும் தொழில் என்று நினைவோடை நடையில் ஒரு அழகிய வலைப்பின்னல் வடிவாய், படிப்பதற்கு சுவாரஸ்யமாக கதை நகர்கிறது.


ஒருமாதமாக தான் வேலைக்குப் போகாததையும் அதனால் கடைத்தெரு பக்கம் போகமுடியாமல் போனதையும் நினைத்து, இனி, தான் வேலைக்குச் செல்லமுடியாது என்பதால் கடைத்தெருவுக்குச் சென்று வரலாமே என்று கிளம்பி வந்திருந்தான் என்கிறபோது வாசகர்கள் நுட்பமாக கவனிக்கப்படவேண்டிய இடம் அது. ஆனால் நெருடும். நுட்பமான விஷயங்களை வாசகர் மனம் அறியாதவாறு மிக சாமர்த்தியமாக அந்த இடத்தினை கடக்கும்படியாகச் செய்துவிடுவது அவரின் சாமர்த்தியத்தினை வெளிப்படுத்துகிறது.

பிரதான சாலையிலிருந்து கிராமத்து சாலைப்பக்கம் பிரிகிற இடத்தில் மணல்லாரி ஒன்றினால் அடிக்கடி ஏற்படுவதுபோல சித்தரிக்கப்படுகின்ற விபத்தினை இந்நாவலின் மைய பலமாக நிச்சயப்படுத்தலாம்.
செல்கிற வழியில் திடீரென்று சாலையோரமாக திவ்யா என்கிற ஒருபெண் காவலர் எதிர்படுகிறார். அவள் அவனுடன் படித்தவள், லிப்ட் கொடுத்து அழைத்துச் செல்கிறபோது பயோடிக் பந்தயக்கதையை அவளிடம் சொல்கிறான். ‘இவ்வளவு நேரமா வராத பேய், மிச்சமிருக்கிற ஒன்றரை மணி நேரத்துல எப்படி வரும்’ என்று எழிலனிடம் திவ்யா கேட்கிறாள். அவன் சிரிக்கிறான். நீதான் அந்தப் பேய் என்கிறான். மிச்சமிருக்கிற ஒன்றரை மணி நேரமென்பதனை எழிலன் கூறவில்லை, ஆனால் திவ்யா குறிப்பிடுகிறாள் என்பதினால் கல்லூரி நாட்களில் அவனோடு ஒருநாள் உறவுகொள்ள ஆசைப்பட்ட அவள்தான் சைபா உருவில் வந்து அவனுடன் உறவுகொண்ட பேயோ என்று எண்ணும்படியாக இருந்தது.
கதையாசிரியர் தெரிந்தே செய்திருப்பாரா…? அல்லது அவருக்கும் அது தெரியவில்லையா என்பது முழுவதும் படித்தால்தான் புரியும்.

தெரிந்தேதான் கடந்துபோகும்படியாக செய்திருக்கிறாரென்றால் நிச்சயம் திவ்யா பேயாக இருப்பது நூறு சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது. இல்லை, கதையாசிரியரின் கவனக்குறைவுதான் என்றால் வாசகர் எளிதில் கடந்துபோகும்படியான சாதாரண விஷயமாகத்தான் அதனை நாம் புரிந்து கடந்து செல்ல வேண்டும்.

எதுவாயினும் கதையின் முடிவில்தான் அது தெரிய வரும் என்று எண்ணி படிக்கும் வாசகர்களுக்கும் புரிபடாத ஏமாற்றமாய்த்தானிருக்கும். எதனையும் சட்டென்று யூகிக்க முடியாத அளவிற்கு மிகவும் சாமர்த்தியமாக கையாண்டிருக்கும்விதம் ஆசிரியரின் எழுத்துத்திறமையை கோலோச்சுவதாக உள்ளது.


கற்புக்கும், கற்புநிலை தவறியமைக்குமான ஒப்பீடாக நெல்லு அரிசியை உவமைப்படுத்தி, ‘நீ நேத்தி வரைக்கும்பத்தாயத்துல இருந்த நெல்லு மாதிரி இருந்த. இன்னிக்கி அரிசியா மாறிட்ட’ என்று அவன் அந்த பயோடிக் மனுஷியுடன் உறவு கொண்டதை சுட்டிகாட்டிச் சொல்கிறகாட்சி நல்ல மேற்கோள்.


அடுத்து தொழில் சம்பந்தமான நினைவுகளில்,ஒருபெண்ணின் வயிற்றிலிருந்து சிசுவை வெளியே எடுப்பதுபோன்ற கவனத்துடன் அகழ்வாராய்ச்சியின்போது ஒரு கல்லை வெளியே எடுக்கிறார்கள் என்கிற தொழில் நுணுக்கங்களை, பல நூற்றாண்டுகளாக மண்ணுக்குள் புதைபட்டு இருக்கும் கலயத்தினையும், அதனை மூடியிருக்கும் மூடியையும் பிரிக்க ஒரு குழந்தையின் சருமத்தை கையாள்வது போன்று நீக்கவேண்டும் என்று மிக அற்புதமாக விவரித்திருக்கிறார்ஆசிரியர்.

புலர்ப்பொழுதில் பூக்கள் மலர்வதைப்போன்றதொரு ஆச்சர்யமாய் அதனுள்ளே தோரையென்கிற பேய்ப்பெருநெல் இருப்பதனை விவரிக்கிறார்.அதற்கு ஒரு கதை. அந்தக் கதையும் வாழ்க்கையோடு ஒன்றிய ஒருவிஷயமாய் சொல்லியிருப்பது மேலும் சிறப்புப் பெற்று கதைக்கு வலுவூட்டுகிறது.

கம்மனாட்டி என்கிற வசவுச்சொல் எவ்வாறு உருமாறி வந்திருக்கிறது என்பதற்கு கதைவடிவில் ஒரு விளக்கத்தை சொல்லியிருக்கிறார். அது எந்தளவுக்கு உண்மை என்பதையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய விஷயம். ஆனால் இப்படியுமிருக்கலாம் என்பதாகத்தான் கதை நகர்ந்துச் செல்கிறது.

ஆண், பெண் பாலுணர்வின் படிநிலையினை நெல்லு, அரிசி, உலர்ந்த அரிசி மாவு, இட்லி தோசை மாவு போன்ற நிலைகளில் ஒப்பிடுவதனை ஆழ்ந்து யோசித்தோமேயானால் மனித வாழ்வு இப்படியான படிநிலையில்தான் கடந்துபோகிறது என்பதனை நாம் உணர முடிகிறது.

ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வாசகரின் மனம் கூர்ந்து கவனிக்கும்படியான ஒரு திருப்பத்தினை வைத்துச்செல்கிற யுக்தி கதையாசிரியருக்கு கைவரப்பெற்றிருக்கிறது என்பதுதான் அவரின் பலம்.நுண்ணிய கவனிப்பு கதையில் மிளிரும்படியாக தொல்லியல் ஆய்வு சார்ந்த பணியில் நடைபெறக்கூடிய அத்தனைத் தகவல்களும் கணகச்சிதமாக வார்த்தைகளில் வடித்திருக்கிறார், தனது தொழில் சார்ந்த பதிவுகளாகவுமிருக்கலாம். பாராட்டப்படவேண்டிய விஷயங்கள்.


கரிகாலன் என்கிற இளைஞனின் கண்டும் காணாததுபோல போகும்படியான, டீனேஜ் பருவ கோளாறினால் அவன் செய்திருக்கும் அசிங்க விஷயங்களிலும் நுண்ணிய உயிரோட்டமாக வாசகரை கடத்திச் செல்வது அவரின் சாமர்த்திய வெளிப்பாடாக, அதற்கே அவர் பெருமுயற்சி, கூடுதல் உழைப்பை செலுத்தியிருக்கிறார் என்பது புலனாகிறது.


மண்ணை அகழ்ந்தான், மணலை அகழ்ந்தான் ஒரு இளைஞனை அகழ்வாய்வு செய்கிற மனம் பெற்றவனாக எழிலன் அவனின் கதைகளை கேட்கத்துவங்குகிறான். அவன் ஒரு சமூக விரோதி. ஆம் அப்படிதான் அவனை விளிக்கிறார். தானொரு செயின் திருடன் என்கிறபோது எழிலனுக்கு தனது கழுத்திலிருக்கும் செயின் அவனால் களவாடப்பட்டது போன்ற பிரமை உருவாகி தத்தளிக்கச் செய்கிறது மனம். ஆனால் அவன் எதிரிலிருக்கும்போது தனது கழுத்தில் செயின் இருக்கிறதா இல்லையா என்பதனை எவ்வாறு கை வைத்துப் பார்ப்பது என்கிற தவிப்பு யதார்த்தமானது. சமூக விரோதியாக காட்டப்படுகிற அந்த இளைஞனின் கண்களிலிருந்து விழுந்த கண்ணீரை தரையில் விழுந்து விடாமல் கைகளில் ஏந்தி வாயில் போட்டுக்கொள்கிற அந்த செயல் அதற்கு அவன் சொல்லும் விளக்கத்தினைக் கேட்கிற யாரும் அவனுக்கு மட்டுமல்ல அவன் அம்மாவிற்கும் சேர்த்து சல்யூட் அடிக்கும்படியாக உள்ளது.


கரிகாலனால் உதவிபெறப்பட்ட ஒரு பெண் பெரிய பணக்காரி, அவள் வீட்டினில் பல கார்கள் நின்று கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், அவள் நடந்தேதான் பள்ளி சென்று வருகிறாள் என்பது யாதார்த்தத்தினை மீறியதாகயிருந்தாலும் அதுவே கதைக்கு பலம் சேர்க்கும் விதமாக உள்ளது. இயற்கை ஏதோ ஒரு ரூபத்தில் ஒவ்வொருவருக்கும் நல்ல வாழ்க்கையை கொடுப்பது கரிகாலன் விஷயத்தில் உறுதிப்படுகிறது.

படைப்பாளிகள் யதார்த்தத்தினை மீறியதாக புனைவுகளையும் கதைக்கு ஏற்றவாறு கையாள வேண்டியிருக்கிறது என்பதற்கான அழுத்தத்தினை முன்வைத்துச் செல்கிறார்.

சைபாவை வைத்து எழிலன் என்ன செய்திருப்பான் என்கிற தான் அனுமானித்த விஷயத்தை அப்பட்டமாய் வெளிப்படுத்துகிற உணர்வாய் காரிலிருந்து இறங்கியபொழுது கரிகாலன் சைபாவின் கன்னத்தில் முத்தமிட்டு தொழில்சார்ந்து தன் அம்மாவை ஒப்பிட்டுச் சொல்லும் விதமாக சைபாவை தன் அம்மாபோல் இருப்பதாகச் சொல்லிச் செல்கிற காட்சி ரசிக்கும்படியாக உள்ளது. ஆனால் இது எதுவும் தெரியாததுபோல, எதுவும் நடவாததுபோல ஒட்டுமொத்த வாசகர்களையும் ஒரேபுள்ளியில் இட்டுச்செல்கிற சாமர்த்தியத்தை கையாண்டிருக்கிறார் எழுத்தாளர்.

அத்துடன், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நிகழ்த்துபவர்களை தெறிக்கவிட்டிருக்கிற கோபத்தெறிப்புகள் கதை முழுக்கவே சம்மட்டியடியாய் அடித்துச் செல்கிறது.
துவக்கத்தில் எழிலன் தனது கைகளிலிருந்து பூக்களை சமாதியின்மேல் வைக்கும்போது அந்த புத்தம்புதிய கருப்புவண்ண சலவைக்கல்லில் தனது முழு உருவமும் தெரிவதனையும், இன்னும் சொல்லப்போனால் தானே அந்தச் சமாதியினுள் புதைக்கப்பட்டிருப்பதான காட்சியை அது தந்தது என்கிறபோதே ஒரு சிறுநெருடல் இருக்கத்தான் செய்தது, ஆனாலும் அதனையும் மழுங்கச் செய்து கடந்துபோகும்படியாக கதையின் விறுவிறுப்பு இட்டுச்சென்றது என்பதுதான் கதையாசிரியரின் சாமர்த்தியம்.


இப்படி வரிக்குவரி வார்த்தைக்கு வார்த்தை சாமர்த்தியமும், சாகசமும், அதிநுட்பமும் நிறைந்ததாய் வாசகர் மனங்களை கட்டி எழுத்துச் செல்கிற நடையில் சுழியம் என்கிற நாவல் வாசகர் மனங்களை கொள்ளைகொள்ளும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

கேடுகெட்ட, நன்றிகெட்ட, வஞ்சனை கொண்ட, வக்கிரம்கொண்ட இன்னும் என்னன்னவோ சொல்லிக்கொண்டே போகலாம், இந்த சமூகத்தை எதனைக்கொண்டு துவம்சம் செய்யலாம் என்கிற உச்சமான கோபத்தின் வெளிப்பாடாகத்தான் இந்த நாவலை பார்க்கமுடியும்.
விமர்சனம் என்பது படைப்பின் நிறைகுறைகளை சுட்டிக் காட்டுவதுதானேத் தவிர, அதன் ஆனிவேரையே அசைத்துப் பார்ப்பதல்ல இது ஒரு வகையான உணர்வு கடத்தல். வித்தியாசமான கதைக்களனைக் கொண்டிருப்பதால் படிக்கிற ஒவ்வொருவரும் உயிரோட்டமான அந்த உணர்வினை அனுபவித்துத் திளைக்க வேண்டும்.
இந்த நாவலைப் பொறுத்தவரையில் முடிவினை அப்பட்டமாய் வெளிப்படுத்துவது பலவீனப்படுத்திவிடும்.ஆகவே நீங்களும் நாவலை வாசித்துப்பாருங்கள். அது நகரும் விறுவிறுப்பில் உங்கள் எண்ணங்களையும் எண்ணங்களையும் நகர்த்துங்கள். ‘

எழுதுவது :
ப.கோவிந்தராசு
ஊத்தங்கால்.