ஔன் சான் சூ ஷீ-க்கு மேலும் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.
ஏற்கனவே கடந்த மாதத்தில் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்ட மியான்மாரின் ஆட்சியிழந்த தலைவர் மீது மேலும் நான்கு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அனுமதியின்றி வாக்கி டோக்கிகள் வைத்திருந்தமை, கொவிட் 19 கட்டுப்பாடுகள் மதிக்காதது போன்றவைக்காக மேற்கண்ட நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக மியான்மாரின் இராணுவ நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
மேலதிக விபரங்கள் எதையும் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்திய இராணுவத் தலைமை வெளியிடவில்லை. சூ ஷீ-யின் வழக்கறிஞர்கள் தமக்குத் தெரிந்த விபரங்களை வெளியிடலாகாது என்று கட்டளையிடப்பட்டிருக்கிறது. சூ ஷீ எவ்விடத்தில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் இராணுவம் வெளியிட மறுத்து வருகிறது.
சூ ஷி-யை இராணுவம் கைது செய்தபோதே மேற்கண்ட வாக்கி டோக்கிகளை அவர் அனுமதியின்றி வைத்திருந்ததாக இராணுவம் குற்றஞ்சாட்டியிருந்தது. அவைகளை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தமக்கிடையேயான தொடர்புகளுக்காகப் பாவித்து வந்ததாக அவர் சார்பில் குறிப்பிடப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்