தமிழும் தமிழீழமும்

ஆழ்கடல் முத்தெடுத்து அழகாக மாலைசெய்து… வேழ முகத்தோனை வேண்டியே நின்றிருந்தோம்


கண்ணீர் தேசத்தின்  கறைபடிந்த நாட்களிலும் தண்ணீரை உண்டிங்கு தாகத்தோடு வாழ்ந்திருந்தோம்


அங்குவந்த கயவராலே மகிழ்ச்சியினை யாமிழந்தோம் பொங்கிநின்ற சூரியனும் புதையுறவே வீழ்ந்துநின்றோம்

.
கன்னிவெடி துப்பாக்கி கதறிடவே கொலையுண்டோம் சிந்துகின்ற வியர்வையிலும் இரத்தத்துளிகளாகச் சிதறுண்டோம்


பெண்ணினத்தின் மாண்பறியா பெரும்பித்தர் பெரும்பிழையால் பிஞ்சுகளும் பேதைகளும் வெம்பிடவே கருகினரே சொந்தவிடம் இல்லையெனச் சொத்தினையும் அழித்திடவே எந்தயிடம் போனாலும் ஏக்கமதும் தீரலையே.


நான்வளர்த்த பச்சைக்கிளி என்னிடத்தில் பேசலையே கூவிச்சென்ற குயிலதுவும் கூடுவந்து அடையலையே ஆடிநின்ற மயிலதுவும் அகவுதலை நிறுத்தலையே


நாடுவிட்டுப் போனாலும் நாங்களுந்தான் மாறலையே கூடுவிட்டுப் பிரிந்தாலும் வீடுவாசல் மறக்கலையே. அம்மையப்பன் அன்பினையும் ஆசைதீரக் கொள்ளலையே


மாறிவரும் உலகத்திலும்  மனிதம் தழைத்தோங்கலையே மனிதரையே கொல்லுகின்ற மிருகமதை உணரைலையே


தமிழனென்ற உறவுமட்டும் தரணியிலே நிலைத்திடவே தன்மான உணர்விங்கு தரங்கூடி நின்றிடுதே தமிழீழம் தனியாகத் தோன்றிடவே மனமேங்கிடுதே

எழுதுவது :
கவித்தென்றல் நாகநாதன்