தனது குடிமக்களனைவருக்கும் மருத்துவக் காப்புறுதியைக் கொடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது கலிபோர்னியா.
அமெரிக்காவில் பெரும்பாலும் தனியார் மருத்துவக் காப்புறுதிகளே வழக்கத்திலிருக்கின்றன. நாட்டின் மக்களனைவருக்குமான மருத்துவக் காப்புறுதியை அரசே கொடுக்கவேண்டும் என்ற குரல் ஒபாமா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எழுப்பப்பட்டது. அதன் ஒரு பங்கு நிறைவேற்றப்பட்டாலும் டிரம்ப் அரசு ஒபாமா கெயார் என்ற அந்தத் திட்டத்தை ரத்து செய்தது.
அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலமான கலிபோர்னியா தற்போது முன்வைத்திருக்கும் வரசு செலவுத் திட்டத்தில் தனது குடிமக்களனைவருக்கும் மருத்துவக் காப்புறுதியைக் கொடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. டெமொகிரடிக் கட்சியைச் சேர்ந்த ஆளுனர் கவின் நியூசம் முன்வைத்திருக்கும் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அங்கே பத்திரங்களின்றி வாழ்பவர்களுக்கும் மருத்துவக் காப்புறுதியை அரசே கொடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
26 வயதினரும் அதைவிட இளமையானவர்களுக்குமான மருத்துவக் காப்புறுதி 2019 லிருந்தே கொடுக்கப்பட்டிருக்கிறது. அது 55 வயதினர் அதற்கு மேற்பட்ட வயதினரை மருத்துவக் காப்புறுதி கடந்த வருடம் முதல் சேர்த்துக்கொண்டிருக்கிறது. புதியதாக முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணையின்படி மீதமிருக்கும் சகலருக்கும் மருத்துவக் காப்புறுதி கொடுக்கப்படும். கலிபோர்னியா மாநில ஆட்சிமன்றத்தில் டெமொகிரடிக் கட்சியினர் பெருமளவு பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறார்கள்.
கொவிட் 19 பரவல் காரணமாக கலிபோர்னியாவின் வரவுசெலவுத் திட்டத்தில் நிதிப்பற்றாக்குறை இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக 40 பில்லியன் டொலருக்கும் அதிகமாக உபரி நிதி இருப்பது தெரியவந்தது. அப்பணத்தை வரவிருக்கும் நிதியாண்டில் பாவிக்க ஆளுனர் முடிவு செய்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்