மியான்மார் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் அந்த நாட்டிற்கு முதலாவதாக விஜயம் செய்யும் கம்போடியப் பிரதமர்.
சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாகிறது தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மியான்மாரின் அரசு நாட்டின் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டு. அதன் பின்பு பல்லாயிரக்கணக்கானோர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டும் கூட இராணுவம் ஆட்சியிலிருக்கிறது. சர்வதேச ரீதியில் புறக்கணிக்கப்பட்டு வரும் மியான்மாரின் இராணுவ அரசை அங்கீகரிப்பது போல அந்த நாட்டுக்கு விஜயம் செய்திருக்கும் கம்போடியத் தலைவர் ஹுன் சென் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார்.
மியான்மார் மக்கள் தமது இராணுவ ஆட்சியை எதிர்த்துப் பல வழிகளிலும் எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். தினசரி நாட்டின் பல பாகங்களிலும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களால் தமது அதிருப்தியை ஆயிரக்கணக்கானோர் காட்டி வருகிறார்கள். இன்னொரு பக்கத்தில் ஒரு சாரார் ஆயுதப் போராட்டத்தின் மூலமும் இராணுவத்தை எதிர்கொள்கிறார்கள்.
மியான்மார் உட்படப் பக்கத்து நாடுகள் ஒன்றிணைந்து செயற்படும் ஆஸியான் அரசியல், பொருளாதார ஒன்றியத்தினரும் இராணுவம் தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கூறி வருகிறது. கடந்த ஏபரல் மாதத்தில் அவர்கள் சந்தித்தபோது மியான்மார் இராணுவம் தனது ஐந்து நடவடிக்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவருவதாக உறுதிகூறியிருந்தது.ஆனால், அவைகளெதையும் நடைமுறைப்படுத்த இயலாமலிருப்பதாகக் குறிப்பிட்டுத் தனது கடுமையான போக்கிலேயே மக்களை எதிர்கொண்டு வருகிறது.
கம்போடியப் பிரதமரின் இந்த விஜயம் ஆஸியான் அமைப்பின் மீதான நம்பிக்கையைச் சர்வதேச ரீதியில் பாதிக்கும் என்று தாய்லாந்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கசித் பிரோம்யா சாடியிருக்கிறார். ஆஸியான் அமைப்பின் தற்போதைய தலைமையை ஏற்றிருக்கும் நாடு கம்போடியாவாகும். அதன் பிரதமரான ஹுன் சென் ஒரு சர்வாதிகாரத் தலைவராகும்.
சாள்ஸ் ஜெ. போமன்